10 செப்டம்பர் 2026



“நமது பாரம்பரியக் கலைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்” – ஜெகன், சிஆர் கார்த்திக்
அம்பாங்: உருமிமேளக் கலைஞர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்வதற்காக செராஸ் வட்டாரத்தில் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை, மலேசிய இந்திய சமூகத்தின் பாரம்பரியக் கலைக்கு கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும் என உள்ளூர் கலைஞர் ஜெகன் மற்றும் தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான சிஆர் கார்த்திக் தெரிவித்துள்ளனர்.
அம்பாங் பகுதியில் இந்திய இளைஞர்கள் கடை வீதியில் உருமிமேளம் வாசித்து பயிற்சி மேற்கொண்ட காணொலி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, உருமிமேளக் கலைஞர்கள் பயிற்சி மேற்கொள்ள ஏன் தனியான இடம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இந்நிலையில், லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அஹ்மத் @ அல்டிமேட்டின் சிறப்பு அதிகாரி முஹம்மத் ஷஃபிக், உருமிமேளக் கலைஞர்களை தொடர்புகொண்டு அவர்களின் பயிற்சி இடம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினரின் ஆலோசனையின் அடிப்படையில், பிரச்சினைக்கு தீர்வு காண தன்னால் முடிந்த உதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின்போது, செராஸ் வட்டாரத்தில் இரண்டு மண்டபங்கள் உருமிமேளக் கலைஞர்களின் பயிற்சிக்காக தயார்படுத்தப்பட்டுள்ளதாக முஹம்மத் ஷஃபிக் தெரிவித்தார்.
இந்த மண்டபங்களில் உருமிமேளம் மட்டுமின்றி, பல்வேறு பாரம்பரியக் கலைகள் தொடர்பான பயிற்சிகளையும் இலவசமாக மேற்கொள்ள முடியும் என்றும், இதனால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பயிற்சிகளை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்ற ஜெகன் மற்றும் சிஆர் கார்த்திக், “நமது பாரம்பரியக் கலைக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதனை பார்க்கிறோம்” என்றனர்.
உருமிமேளம் என்பது தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பரியக் கலை என்றும், அதனை வளர்க்கும் கலைஞர்களை தவறாகப் பார்க்கும் நிலை மாற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
“இளைஞர்கள் தங்களது திறமைகளை முறையாக வளர்த்துக்கொள்ளவும், நமது பாரம்பரியக் கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் இந்த வாய்ப்பு பெரும் உதவியாக அமையும். இன்றைய நடவடிக்கை அதற்கான சிறந்த முன்னுதாரணமாகும்,” என அவர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் – அம்பாங்















