நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி – ஒரே குழியில் நல்லடக்கம்

16 செப்டம்பர் 2026

கூலிம்: சுங்கை கராங்கான், தாமான் தேசா காயாங்கானில் கடந்த திங்கட்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு சிறுவர்களின் உடல்கள் இன்று ஒரே குழியில் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்கள் முஹம்மது ஏரில் அசீஸ் முஹம்மது ஸாஃபிஸ், 12; அவரது ஒன்றுவிட்ட சகோதரரான முஹம்மது அரிஃப் நவ்ஃபான், 8; மேலும் அவர்களது நண்பர்களான முஹம்மது ஸாஃப்ரில் அர்ஷாட் முஹம்மது அஸ்ரின், 12, மற்றும் முஹம்மது இமான் நூருத்தீன், 10, ஆகியோர் ஆவர்.

நான்கு சிறுவர்களின் ஜனாஸாக்கள் கூலிம், சுங்கை கராங்கான் பள்ளிவாசல் இஸ்லாமிய மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஒரே குழியில் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்பட்டன.

உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்வு, துயரத்திலும் கண்ணீரிலும் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்தது.

ஒரே சம்பவத்தில் நான்கு சிறுவர்களை இழந்த குடும்பங்களின் சோகம் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவர்களின் ஆன்மாக்கள் இறைவனின் அருளால் சாந்தியடையவும், அவர்களுக்கு சொர்க்கத்தில் சிறப்பான இடம் கிடைக்கவும் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *