கோலாலம்பூர், செப். 10

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், உயர்வு மடானி 2.0 திட்டத்திற்கு கூடுதலாக 25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் இத்திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு 50 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, பல்வேறு வணிகத் துறைகளில் செயல்பட்டு வரும் 1,400 பி40 மற்றும் எம்40 தொழில்முனைவோர்களை வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார். இன்று பிரிக்பீல்ட்ஸ் கலாமண்டபம் மண்டபத்தில் நடைபெற்ற உயர்வு மடானி மானியத் திட்டம் – 2026 இரண்டாம் கட்ட உதவி வழங்கும் விழாவில், டத்தோஸ்ரீ ரமணன் பயனாளர்களுக்கு காசோலை பிரதிகளை வழங்கினார்.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள 159 தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர்.
இதற்கு முன் முதல் கட்டத்தில் 126 பேருக்கு உதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த பயனாளர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 7.49 மில்லியன் ரிங்கிட் மானியம் வழங்கப்பட்டுள்ள இத்திட்டம், இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர்களின் வணிக வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.















