16.05.2026

தேசிய அளவிலான திருக்குறள் ஒலிம்பியாட் போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
வள்ளுவம் காட்டும் அறநெறிகள் இன்றும் காலத்துக்கு ஏற்றவை – டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்
கோலாலம்பூர், மே 16 – மலேசிய இந்திய இளைஞர் மன்றம் (MIYC) சிலாங்கூர் மாநிலப் பேரவை முன்னெடுத்த தேசிய அளவிலான திருக்குறள் ஒலிம்பியாட் போட்டியின் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான Datuk Seri Dr. M. Saravanan தலைமைதாங்கி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்தப் போட்டி, தமிழரின் மரபு, பண்பு மற்றும் இலக்கியப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. திருக்குறளின் அர்த்தத்தையும் அதன் வாழ்க்கை நெறிகளையும் இளைய தலைமுறையினர் ஆழமாக உணர்வதற்கான ஒரு சிறந்த தளமாக இந்நிகழ்வு அமைந்ததாகக் கூறப்பட்டது.
விழாவில் உரையாற்றிய டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன், திருக்குறள் என்பது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட உயரிய வாழ்வியல் வழிகாட்டி எனக் குறிப்பிட்டார். “மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குச் சொன்ன அறிவுரைகளின் தொகுப்பே திருக்குறள்” என அவர் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் 21-ஆம் நூற்றாண்டிலும், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து உலகம் பேசும் இக்காலத்திலும் கூட, திருவள்ளுவர் வகுத்துக் காட்டிய அறநெறிகள் அப்படியே பொருந்திக் காணப்படுவது அதன் மகத்துவமாகும் என்றார்.
திருக்குறளை மனனம் செய்வது மட்டுமே அதன் நோக்கம் அல்ல என்றும், வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்துவதே உண்மையான பயன் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக,
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய அவர், மாணவர்கள் கற்ற குறள்களில் ஏதேனும் ஒன்றையாவது தங்களது அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடித்தால், அதுவே இந்தப் போட்டிக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி எனக் கூறினார்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்த Malaysian Indian Youth Council (MIYC) சிலாங்கூர் மாநிலப் பேரவைக்கு அவர் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விழாவில் சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். திருக்குறளின் அறப்பண்புகளை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.













