மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டம் நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, தரமான வேலைவாய்ப்புகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் முக்கிய தேசிய முயற்சியாக அமையும் என்று தெரிவித்தார்.

கோலாலம்பூர் | மே 17, 2026

மலேசியாவின் தொழிலாளர் சந்தையை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில், 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தேசிய திறன் மேம்பாட்டு திட்டமான ‘PACE’ (Programme for Accelerating Career and Employment Enhancement) திட்டத்தை மனிதவள அமைச்சு இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.

மனிதவள அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டம் நாட்டின் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்துவதோடு, தரமான வேலைவாய்ப்புகள் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் முக்கிய தேசிய முயற்சியாக அமையும் என்று தெரிவித்தார்.

அமைச்சர் கூறுகையில், “இது வெறும் பயிற்சி வழங்கும் திட்டம் அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் புதிய பொருளாதார சூழலுக்கேற்ப அதிக திறன் கொண்ட, நெகிழ்வான பணியாளர்களை உருவாக்க அரசாங்கம் மேற்கொள்ளும் நீண்டகால முதலீடாகும்,” என்றார்.

10 முக்கிய அம்சங்களுடன் PACE

இந்த ‘PACE’ திட்டம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET), இளைஞர் திறன் மேம்பாடு, டிஜிட்டல் பொருளாதார மாற்றம், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் கிக் பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு திறனை உயர்த்துதல் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இளைஞர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள், குறைந்த வருமானக் குழுக்கள் மற்றும் கிக் துறையில் ஈடுபட்டிருப்போர் ஆகியோருக்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிக் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு

இந்த திட்டத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக, இ-ஹெய்லிங் மற்றும் பி-ஹெய்லிங் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உதவித் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இதற்காக 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனிதவள மேம்பாட்டு கழகமான HRD Corp வழியாக இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தொழில்பயிற்சி பெறும் மாணவர்களுக்காக 10 மில்லியன் ரிங்கிட் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பின்னடைவை சமாளிக்கும் முயற்சி

கடந்த மே 1ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்த பொருளாதார பின்னடைவுத் தொகுப்பு 2026-இன் ஒரு பகுதியாகவே இந்த PACE திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மொத்தமாக 710 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு மனிதவள மற்றும் சமூகப் பாதுகாப்பு முயற்சிகளின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

அமைச்சர் ரமணன் மேலும் கூறுகையில், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் யாரும் பின்தங்கக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. திறன் மேம்பாட்டின் மூலம் மக்கள் தங்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக்கொள்ளும் வாய்ப்புகள் இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும்,” என்றார்.

உயர் வருமான நாடாக மலேசியா

இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இலக்கு நோக்கிய முதலீடுகள், நாட்டின் பொருளாதார போட்டித்திறனை உயர்த்துவதோடு, மலேசியாவை நிலையான உயர் வருமான நாடாக மாற்றும் முயற்சிக்கும் வலுசேர்க்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொருளாதார மாற்றம் வேகமெடுத்து வரும் சூழலில், தொழில்நுட்ப அறிவும் பல்துறை திறன்களும் கொண்ட பணியாளர்களை உருவாக்குவது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாததாகும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *