ராவாங் பள்ளி மாணவர் துன்புறுத்தல் விவகாரம்: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை – சிலாங்கூர் கல்வித் துறை உறுதி

ஷா ஆலம், ஜூலை 12

ராவாங் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் துன்புறுத்தல் (Bullying) சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை (JPN) இவ்விவகாரத்தை மிகுந்த தீவிரத்துடன் அணுகி வருவதாக தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு கல்வித் துறை முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய எந்த நபருக்கும் சலுகையோ பாதுகாப்போ வழங்கப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராவாங் பள்ளி மாணவர்களைச் சார்ந்த ஒழுங்கீனச் சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதை கல்வித் துறை மிகவும் கவனத்துடன் எடுத்துக்கொண்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவிதமான ஒழுங்கீன நடவடிக்கையையும் கல்வித் துறை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால், விசாரணை நிறைவடையும் வரை பொதுமக்கள் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் மீது கல்வி அமைச்சின் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, மனநலம் மற்றும் நலவாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில், துன்புறுத்தல் சம்பவங்களுக்கு எதிராக கல்வி அமைச்சு தொடர்ந்து “பூஜ்ஜிய சகிப்புத்தன்மை” (Zero Tolerance) கொள்கையைப் பின்பற்றி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *