கோலாலம்பூர், ஏப்ரல் 15 –

மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், TalentCorp (டேலண்ட் கார்ப்) நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக Brinda Moorthy இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனக் கடிதத்தை மனிதவள அமைச்சர் Datuk Seri Ramanan Ramakrishnan நேரில் வழங்கினார். இந்நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இந்த நியமனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், நவீன தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப நாட்டின் மனிதவள திறன்களை மேம்படுத்துவதில் இந்த முடிவு முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அரசாங்கம், கல்வி மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிருந்தா மூர்த்தி, டேலண்ட் கார்ப் நிறுவனத்தை சிறப்பாக முன்னெடுப்பார் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
“புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தொழில்துறைக்கு தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் பிருந்தாவின் அனுபவம் நாட்டிற்கு பெரும் பலமாக அமையும். தற்போதைய சவாலான பொருளாதார சூழலில் அவரது தலைமையின்மை மிக அவசியமானது,” என்று அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
பிருந்தா மூர்த்தியின் தலைமையில், டேலண்ட் கார்ப் நிறுவனம் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையை வலுப்படுத்துவதோடு, மலேசியர்களுக்கு தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரியான Edward Ling ஆற்றிய சேவைகளுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார்.
புதிய பொறுப்பை ஏற்கும் பிருந்தா மூர்த்தி தனது பணியில் சிறந்து விளங்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்குவார் என அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.















