பத்துகேவ்ஸ் | 7 ஏப்ரல் 2026

பத்துகேவ்ஸில் 7 வயது சிறுவன் உதயகுமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக அலட்சியம் காட்டாமல், போலீசார் உடனடி மற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாங்கி சட்டமன்ற உறுப்பினரின் இந்தியர் பிரிவு சிறப்பு அதிகாரி பூபாலன் இதனை தெரிவித்துள்ளார். பள்ளி வேனில் ஏறியிருந்த சிறுவன் உதயகுமார் திடீரென துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த சம்பவம் அவரது தந்தையின் கண் முன்னே நடைபெற்றிருப்பது குடும்பத்திற்குப் பெரிய துயரமாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்த மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி வேன் ஓட்டுநர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், வேனின் உரிமையாளராக உள்ள அறவாரியத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் கவலைக்கிடமாக உள்ளது என பூபாலன் குறிப்பிட்டார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தமிழர் முன்னேற்ற கழகத்தினர் ஊடகங்களில் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இதுவரை 9-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் தெளிவான நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர் மற்றும் அறவாரியத்தின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என பூபாலன் வலியுறுத்தினார்.
இதனிடையே, உயிரிழந்த சிறுவன் உதயகுமார் இல்லத்திற்கு கோம்பாக் பாஸ் கட்சியினர் மற்றும் கட்சியின் முஸ்லிம் அல்லாதோர் ஆதரவு பேரவையின் பொறுப்பாளர்கள் இன்று நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், தேவையான உதவிகளையும் வழங்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.















