தங்க. கணேசன் மீண்டும் தேசியத் தலைவராக தேர்வு மலேசிய இந்து சங்கத்தின் 49ஆவது ஆண்டு பொதுக்கூட்டத் தேர்தலில் வெற்றி அணிக்கு அமோக ஆதரவு

20 ஜூலை 2026

மலேசிய இந்து சங்கத்தின் 49ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று சன்வே ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் நடைபெற்ற தேசிய நிர்வாகக் குழுத் தேர்தலில் தங்க. கணேசன் தலைமையிலான வெற்றி அணி பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதன் மூலம், அவர் மீண்டும் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகை தந்த மொத்தம் 2,072 ஆயுள் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தலில் தங்க. கணேசன் தலைமையிலான வெற்றி அணியும், டாக்டர் முரளிதரன் தலைமையிலான மறுமலர்ச்சி அணியும் போட்டியிட்டன.

கடுமையான போட்டிக்குப் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தங்க. கணேசன் அணியைச் சேர்ந்த ஒன்பது வேட்பாளர்களும் வெற்றி பெற்று புதிய தேசிய நிர்வாகக் குழுவில் இடம்பிடித்தனர்.

வெற்றி பெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

• பொன் சந்திரன் – 1,027 வாக்குகள்
• சுகுமாரன் – 1,026 வாக்குகள்
• முனைவர் லிங்கேஸ்வரன் – 1,026 வாக்குகள்
• ஜி. முனிஸ்வரன் – 1,021 வாக்குகள்
• உமாசுதன் – 1,009 வாக்குகள்
• எம். ராதா – 1,001 வாக்குகள்
• எம். குமார் – 985 வாக்குகள்
• பரமசிவம் – 981 வாக்குகள்
• விஜய பாஸ்கர் கணேசன் – 980 வாக்குகள்

தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற மத்திய செயலவைக் கூட்டத்தில் புதிய தேசிய நிர்வாகப் பொறுப்பாளர்களும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

தேசிய நிர்வாகப் பொறுப்புகள்:

• தேசியத் தலைவர் – தங்க. கணேசன்
• துணைத் தலைவர் – ப. பாலகிருஷ்ணன்
• முதல் உதவித் தலைவர் – டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷாண்
• இரண்டாம் உதவித் தலைவர் – கணா மூர்த்தி
• பொதுச் செயலாளர் – விநாயகமூர்த்தி
• துணைப் பொதுச் செயலாளர் – பரமேஸ்வரி
• தேசிய கௌரவப் பொருளாளர் – ரா. பெருமாள்
• துணைப் பொருளாளர் – விஜய பாஸ்கர் கணேசன்

பொதுக்கூட்டத்தில் பல்வேறு முக்கியமான அமைப்புச் சீர்திருத்தத் தீர்மானங்களும் உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, இனி மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் தலைவர் பதவிக்காக தனித் தேர்தல் நடத்தப்படாமல், துணைத் தலைவர் இயல்பாகவே அடுத்த தேசியத் தலைவராக பொறுப்பேற்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதேவேளை, தற்போதுள்ள 27 பேர் கொண்ட தேசிய நிர்வாகக் குழுவை 21 உறுப்பினர்களாகக் குறைக்கும் திருத்தத்திற்கும் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சங்கத்தின் உள் விவகாரங்களை மத்திய செயலவை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் மூலம் தீர்வு காணாமல், நேரடியாக மலேசிய நிறுவன ஆணையம் (SSM) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) போன்ற வெளிப்புற அமைப்புகளிடம் கொண்டு செல்லும் உறுப்பினர்களை மூன்று ஆண்டுகள் சங்கத்திலிருந்து இடைநீக்கம் செய்யும் பரிந்துரைக்கும் பொதுக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானங்கள் அனைத்தும் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, தேவையான சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மலேசிய நிறுவன ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று தேசியத் தலைவர் தங்க. கணேசன் தெரிவித்தார்.

இந்த தேர்தல் முடிவு, மலேசிய இந்து சங்கத்தின் உறுப்பினர்கள் தற்போதைய தலைமையின் சேவைக்கும் நிர்வாக அனுபவத்திற்கும் வழங்கியுள்ள வலுவான நம்பிக்கையின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. வரவிருக்கும் காலகட்டத்தில் சமுதாய ஒற்றுமை, இளைஞர் பங்கேற்பு, ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளுடனான ஒருங்கிணைப்பு, கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்த புதிய நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய இந்து சமுதாயத்தின் முன்னேற்றம், ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மையை வலுப்படுத்தும் புதிய அத்தியாயமாக இந்தத் தேர்தல் அமையும் என்று பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *