கருஞ்சட்டை இளைஞர் படையின் ஏற்பாட்டில் சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் கருத்தரங்கு

7.04.2026

4 /4/2025 – கடந்த சனிக்கிழமை கருஞ்சட்டை இளைஞர் படை சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சிக்கலும் தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அரங்கில் (Kuala Lumpur Chinese Assembly Hall) வெற்றிகரமாக நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், அரசு சாரா இயக்கங்கள், மாணவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டணர். தற்போது அதிகரித்துவரும் இனங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடும் நிலம் தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் நான்கு முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான லத்திஃபா கோயா, மலேசிய சோசலிசய கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வனும், சமூக ஆர்வலரும் கருஞ்சட்டை இளைஞர் படையின் பிரதிநிதியுமான கௌசல்யாவும் வழக்கறிஞருமான குணசேகரனும் அதில் அடங்குவர்.

இந்தக் கருத்தரங்கில் சிறுபான்மை இனமான இந்தியர்கள் தங்கள் இனம் மற்றும் ஆலயம் தொடர்பான சர்ச்சை எழும்போது உணர்ச்சிவயப்பட்டு பதிலடி கொடு‌ப்பதை விடுத்து தெளிவான, முறையான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என கருத்து தெரிவித்தார் லத்திஃபா கோயா. மேலும், காலம் காலமாக நீடித்து வரும் இந்த நில சிக்கல் இப்பொழுது சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு வன்முறையாக வலுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், கௌசல்யா அவர்கள் பகுத்தறிவு அல்லது இறை மறுப்பு கொள்கையைக் கொண்ட இயக்கங்களும் ஏன் இந்தச் சிக்கலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். தந்தை பெரியார் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்திய போராட்டத்தை உதாரணமாகக் காட்டி இந்தச் சிக்கலை இந்து மத பிரச்சனை என மட்டும் பார்க்காமல் பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறை கொள்கையாக இதை அணுக வேண்டும் எனவும் பகிர்ந்து கொண்டார். இந்தச் சிக்கலை சில பொருப்பற்ற அரசியல்வாதிகளும் இந்துத்துவா அமைப்பினரும் தங்கள் கொள்கைப்பரப்பிற்குப் பயன்படுத்தி வருவதையும் கண்டித்து பேசிய அவர் இன்னும் சாதிய அடிப்படையில் சில ஆலய தலைமைத்துவம் இயங்கி வருவதையும் அதன் விளைவாக அதிகரித்துள்ள சிறுதெய்வ வழிப்பாட்டுத் தலங்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து இடது சாரி தரப்பின் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார் அருட்செல்வன். பெருமுதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்குமிடையே நிலவும் வர்க்க போராட்டமே இன்று நிலம் மற்றும் ஆலய விவகாரத்தில் பிரதிபலிப்பதாக கருத்து தெரிவித்தார். இன்று தோட்டங்களிலும் மருத்துவமனை, இரயில்நிலையம் அருகே எழுப்பப்பட்ட ஆலயங்களும் அன்றைய பாட்டாளிகளால் எழுப்பப்பட்டவை ; இந்தச் சிக்கலை மதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் பாட்டாளி மக்களுக்கும் பாமரர்களுக்கும் எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறையாக இதை அணுகவேண்டும் என்று பகிர்ந்து கொண்டார். வழக்கறிஞரான குணசேகரன் இந்த சிக்கலில் உள்ள சட்ட நுணுக்கங்களைப்பற்றி கருத்துரைத்தார். அண்மையில் சர்ச்சைக்குள்ளான ராவாங் சிரி உச்சிமலை முனிசுவரன் ஆலயத்தைச் சுட்டிக்காட்டி ஆலய உரிமையாளர்கள் தங்களது நிலம் வழுக்கட்டாயமாகத் துண்டாடப்பட்டாலோ அவர்கள் வெளியேற்றபட்டாலோ மேம்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்க சட்டத்தில் இடமுண்டு என்றார். மலேசியாவின் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) பிரிவு 99-இன் படி நிலம் தகராறால் மக்களின் அமைதியும் பாதுகாப்பும் சீர்கெடும் பொழுது மாஜிஸ்திரேட் எழுத்துப்பூர்வமான உத்தரவைப் பிறப்பித்து தகராறில் ஈடுப்பட்டுள்ள தரப்பினரை நேரில் அல்லது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக வைக்க வேண்டும். மேலும் 1950-ஆம் ஆண்டின் குறிப்பிட்ட நிவாரணச் சட்டத்தின் (Specific Relief Act 1950) பிரிவு 7(2)-இன் படி சொத்துரிமையாளரக்கு வாடகைதாரர் ஒப்புதல் அளிக்காத வரை நீதிமன்ற உத்தரவின்றி வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுக்கிறது. மேலும் ஆலய உரிமையாளர்கள் தங்களது நில உரிமையைக் காட்டாயம் புரிந்து கொண்டு துண்டாடல் ஏதும் நேரின் அதனைச் சட்டமுறைப்படி கையாள வேண்டும் என்றார்.

 

சுமார் இரண்டு மணிநேரமாக நடந்த இந்தக் கருத்தரங்கில் பொதுமக்களும் நேரடியாக பேச்சாளர்களிடம் கேள்வி எழுப்பி தெளிவுப் பெற்றுக்கொண்டனர். கருஞ்சட்டை இளைஞர் படை மூன்று ஆண்டுகளாக இயங்கி வரும் ஓர் இளைஞர் இயக்கமாகும். தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளையும், சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்துகளையும், பெண்ணியம், சமூக நீதி, சமத்துவம் என முற்போக்குச் சிந்தனைகளையும் சமூகத்தில் கொண்டு சேர்க்க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கருஞ்சட்டை இளைஞர் படை இந்தக் கருத்தரங்கைத் தவிர்த்து மாதந்தோறும் சித்தாந்த வகுப்பு, மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்ணியத்தை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள், இளைஞர்களை மையப்படுத்தி சமூக போராட்டங்களும் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆண்டுதோறும் பன்னாட்டு பகுத்தறிவு கருத்தரங்கை நடத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பகுத்தறிவு சிந்தனையாளர்களை ஒரு கூரையின் கீழ் ஒன்று சேர்க்கிறது. இந்த இளைஞர் இயக்கத்திற்கு ஆதரவு தரவோ அல்லது இணைந்து செயலாற்ற எண்ணம் இருப்பின் ஒருங்கிணைப்பாளரான தோழர் நாகேன் அவர்களை (+60 16-591 0564) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *