செப்பாங் ஏப் 7

மத்திய கிழக்கு போரின் விளைவால் எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ள போதிலும், ஏர் ஆசியா எக்ஸ் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்காது என அதன் இணை நிறுவனரும் ஆலோசகருமான டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
மேற்கு ஆசியா மோதல்களினால் ஏற்பட்டுள்ள எண்ணெய் வெளியேற்ற தாக்கத்தை சமாளிக்க ஏர் ஆசியா எக்ஸ் தனது விமான பயணங்களை குறைப்பதோடு, விமான கட்டணங்களை உயர்த்தும் என கேப்பிட்டல் ஏ தலைமை செயல்முறை அதிகாரியுமான அவர் சொன்னார்.
கோவிட் 19 தாக்கம் உட்பட கடந்த கால சவால்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடப்பு சவால்களிலிருந்து ஏர் ஆசியா எக்ஸ் மீட்சி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று இங்கு ஏர் ஆசியா தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் விளக்க கூட்டத்தில் அவர் பேசினார்.
ஏர் ஆசியாவின் சரக்கு பிரிவு, விமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு நிறுவனம் ADE, Air Asia MOVE மற்றும் Air Asia NEXT ஆகிய டிஜிட்டல் தலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே நடப்பு நிலவரம் மற்றும் எண்ணெய் வெளியேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விமான கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
அனைத்து நிலையிலும் கவனமாக இந்த நடவடிக்கையை ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதுவரை சுமார் 10 விழுக்காடு விமான பயணங்களை ஏர் ஆசியா எக்ஸ் குறித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அதே வேளையில் தனது ஊழியர்களை ஏர் ஆசியா எக்ஸ் குறைக்கவில்லை. மேலும் சம்பளம் இல்லா விடுப்பில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியாவின் விரிவான உள்நாட்டு மற்றும் ஆசியான் விமான சேவைகள் தொடர்ந்து வளர்ச்சி நிலையை கண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் புவிசார் அரசியல் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு வரும் ஜூன் மாதம் பஹ்ரைன் நகருக்கு தனது விமான சேவையை ஏர் ஆசியா தொடங்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அதே போல் திட்டமிட்டபடி தென் கொரியாவின் புஸான் நகருக்கு தனது விமான சேவை ஏர் ஆசியா எக்ஸ் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ள போதிலும் தனது பணியாளர்களை ஏர் ஆசியா எக்ஸ் குறைக்காது என அவர் உறுதி அளித்தார்.
இதனிடையே நிர்வாக அதிகாரமற்ற தலைவராக பொறுப்பேற்றுள்ள டான்ஶ்ரீ ஜமாலுடின் இப்ராஹிம்மை ஏர் ஆசியா எக்ஸ் வரவேற்றது.
ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் இணைந்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாக டான்ஶ்ரீ ஜமாலுடின் தமது உரையில் கூறினார்.
ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஃபோ லிங்கம் மற்றும் அதன் நிர்வாகத்துடன் அணுக்கமாக பணியாற்ற போவதாக அவர் சொன்னார்.
விமான போக்குவரத்து துறைக்கு இது ஒரு சவால்கள் மிகுந்த காலம் என்பதால், அந்த சவால்களை சந்தித்து வெற்றி பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.















