தேதி : 23 ஏப்ரல் 2026

மாட்டுக்கார வேலன் – 56 ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் மறுவெளியீடு; தமிழகமெங்கும் இன்று முதல் திரையிடல்
சென்னை:
1970 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழா சாதனை படைத்த, மக்கள் திலகம் M. G. Ramachandran இரட்டை வேடங்களில் நடித்த மாட்டுக்கார வேலன் திரைப்படம், 56 ஆண்டுகள் கழித்து புதுப்பித்த டிஜிட்டல் வடிவில் மீண்டும் இன்று (23.04.2026) முதல் தமிழகமெங்கும் திரையிடப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் வணிக ரீதியாகவும், ரசிகர்கள் வரவேற்பிலும் சாதனை படைத்த இப்படம், புதிய தொழில்நுட்பத்தில் சீரமைக்கப்பட்டு (Digital Restoration) மேம்பட்ட ஒலி மற்றும் காட்சி தரத்துடன் மீண்டும் திரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுவெளியீட்டின் தொடக்கமாக இன்று மாலை காட்சியிலிருந்து பல நகரங்களில் கோலாகலமாக வெளியீடு நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக, பெங்களூருவில் உள்ள அருணா திரையரங்கில் கடந்த 17 ஏப்ரல் 2026 முதல் தினசரி மாலை 4.30 மணி காட்சியாக திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இப்படம் இன்று முதல் வெளியிடப்பட்டுள்ளது. அலங்கார், பாலகிருஷ்ணா, ராஜேஷ், பத்மம், சங்கீத், கௌரி, சாந்தி உள்ளிட்ட பல அரங்குகளில் டால்பி அட்மாஸ், கியூப், சோனி போன்ற நவீன ஒலி-ஒளி தொழில்நுட்பங்களுடன் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட ரசிகர்கள், குறிப்பாக எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மறுவெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பழமையான வெற்றி படங்கள் புதிய தலைமுறைக்கு மீண்டும் அறிமுகமாகும் முயற்சியாகவும், தமிழ்த் திரைப்பட வரலாற்றை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பாகவும் இந்த மறுவெளியீடு பார்க்கப்படுகிறது.
இந்த வெளியீட்டிற்கான தகவல்களை நெல்லை நகரத்தைச் சேர்ந்த வி. ராஜா மற்றும் திருப்பதி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் திரைப்பட விநியோகஸ்தர் சேகர் வழங்கியுள்ளனர்.















