தேதி: 8 ஏப்ரல் 2026

பூமியில் இருந்து முழுமையாகக் காணாத சந்திரப் பகுதி – மனிதகுலம் முதன்முறையாகப் பதிவு செய்தது
சர்வதேச விண்வெளி ஆய்வில் ஒரு புதிய மைல்கல்லாக, NASA முன்னெடுத்த Artemis II மிஷனில் பங்கேற்ற விண்வெளி வீரர்கள், இதுவரை பூமியில் இருந்து முழுமையாகக் காணப்படாத சந்திரப் பகுதியை முதன்முறையாக நேரில் கண்டு பதிவு செய்துள்ளனர்.
அந்த பகுதி, Orientale Basin எனப்படும், சுமார் 600 மைல் அகலமுள்ள ஒரு மிகப்பெரிய தாக்கக் குழி (impact crater) ஆகும். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு மாபெரும் விண்கல் மோதலின் விளைவாக இது உருவாகியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் அமைப்பு தனித்துவமானது; நீரில் கல்லை வீசியபோது உருவாகும் அலை போன்ற வளைய வடிவங்களில் இந்தக் குழி விரிந்து காணப்படுகிறது.
இந்த பகுதி முழுமையாகப் பார்க்க முடியாத முக்கிய காரணம், அது Moon-ன் விளிம்புப் பகுதியில் அமைந்துள்ளது என்பதே. இதனால், பூமியில் இருந்து இது ஓரளவு மட்டுமே, குறிப்பிட்ட கோணங்களில் தான் காண முடிந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படங்கள், Orion விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. சூரிய ஒளி நேரடியாக அந்தப் பகுதியைத் தாக்கிய தருணத்தில், அதன் முழுமையான வடிவமைப்பு தெளிவாக வெளிப்பட்டது.
மேலும், இந்தப் படங்கள் பாரம்பரிய ரேடியோ அலைகள் மூலம் அல்லாமல், நவீன லேசர் தொடர்பு தொழில்நுட்பமான Optical Communications System வழியாக, மிக அதிவேகமாக பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விஞ்ஞானிகள் இதை சாதாரண புகைப்படமாக மட்டுமே பார்க்கவில்லை. இது, இதுவரை கோட்பாடுகள் மற்றும் மங்கலான படங்களாக இருந்த சந்திரப் பகுதிகளை மனிதர்கள் நேரடியாக ஆராய்வதற்கான புதிய காலத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இத்துடன், விண்வெளி ஆய்வின் அடுத்த இலக்கு – சந்திரனின் இருண்ட பகுதி. மனிதகுலத்தின் பயணம் இப்போது தான் உண்மையாக ஆரம்பமாகிறது.















