கூட்டரசு அரசுப் பணியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் 3.63% மட்டுமே – சமமான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய 2027–2029 சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்த ACE வலியுறுத்தல்!

29 அக்டோபர் 2026 

Mr. Pasupathi Sithamparam Chairman, ACE

கூட்டரசு அரசாங்கப் பணியில் இந்தியர்களின் குறைந்தளவிலான பிரதிநிதித்துவம் – நிலைமையைச் சீர்செய்ய நடவடிக்கை தேவை
மலேசியக் கூட்டரசு அரசாங்கப் பணியில் இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து மிகக் குறைவாக இருப்பது குறித்து, இந்திய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பு – (ACE) தனது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறது.
அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நாட்டிலுள்ள 1 மில்லியனே 302 ஆயிரத்து 713 அரசாங்கப் பணியாளர்களில் இந்தியர்கள் வெறும் 3.63 விழுக்காடு (47 ஆயிரத்து 349 பேர்) மட்டுமே உள்ளனர். இவர்களில் 41 ஆயிரத்து 891 பேர் கூட்டரசு அரசுப் பணியில் பணியாற்றுகின்றனர்.
இதிலும் கவலையளிக்கும் செய்தி என்னவென்றால், கூட்டரசு அரசுப் பணியில் உள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினரான 38 ஆயிரத்து 413 பேர் மூன்று அமைச்சுகளில் மட்டுமே பணியாற்றுகின்றனர். அவை கல்வி அமைச்சு (21 ஆயிரத்து 773 பேர்), சுகாதார அமைச்சு (14 ஆயிரத்து 758 பேர்), உயர்கல்வி அமைச்சு (ஆயிரத்து 882 பேர்) ஆகும்.
ஏனைய கூட்டரசு அமைச்சுகள், அரசுத் துறைகள் அனைத்திலும் சேர்த்து வெறும் 3 ஆயிரத்து 478 இந்தியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்கள் கூட்டரசு அரசுப் பணியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் எந்த அளவிற்குச் சீரற்ற நிலையில் உள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன.
அரசுப் பணி நியமனங்களில் குறைந்த அளவிலான வாய்ப்புகள்
இந்தியர்களின் அரசுப் பணி நியமனங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களும் அதே அளவிற்குக் கவலையளிக்கின்றன.
2021 முதல் 2025 வரையிலான ஐந்தாண்டு காலத்தில், பொதுச் சேவை ஆணையத்திடம் இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து மொத்தம் 194 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
• 194 ஆயிரத்து 807 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
• 15 ஆயிரத்து 875 விண்ணப்பதாரர்கள் (8.15%) மட்டுமே நேர்காணலில் கலந்துகொண்டுள்ளனர்.
• நேர்காணலில் கலந்துகொண்டவர்களில் ஐயாயிரத்து 289 பேர் (33.32%) பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
• மொத்த விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், பணி நியமனம் பெற்றவர்களின் விகிதம் வெறும் 2.71 விழுக்காடு மட்டுமே.
பொதுச் சேவை ஆணையம் நிர்ணயித்துள்ள தகுதி நிபந்தனைகளைச் சில விண்ணப்பதாரர்கள் நிறைவு செய்யாமல் இருக்கலாம் என்பதையும், கூட்டரசு அரசுப் பணிகளுக்கான போட்டி கடுமையாக இருப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன.
தகுதியுள்ள மலேசிய இந்தியர்களுக்கு அரசுப் பணி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இன்னும் கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள முடியாதா?
குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட B40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களைப் பொறுத்தவரை, இந்தக் கேள்வி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இச்சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகள், அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் வேலைவாய்ப்புகளையும் பாதிக்கின்றன. இத்தகைய குடும்பங்களுக்குக் கூட்டரசு அரசாங்கப் பணி என்பது வெறுமனே ஒரு வேலைவாய்ப்பு மட்டுமல்ல.
அது நிலையான வருமானத்திற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும், குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் முக்கியமான வாய்ப்பாகும். குறிப்பாக, தலைமுறைகளாகச் சமூகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுவரும் குடும்பங்களுக்கு, அரசுப் பணி சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியமான பாதையாக அமையக்கூடும்.
அரசாங்கத்தின் அணுகுமுறையில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவை
சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களின் நிலையை மேம்படுத்துவதற்கு சிறப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதை அரசாங்கம் நீண்டகாலமாக அங்கீகரித்து வந்துள்ளது.
எடுத்துக்காட்டிற்கு, உயர்கல்வித் துறையில் வரலாற்று ரீதியான, சமூகப் பொருளாதாரப் பின்னடைவுகளைக் கருத்தில்கொண்டு, கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காகச் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகளும் பூமிபுத்ரா இடஒதுக்கீட்டு முறைகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
அதேபோன்ற நெகிழ்வுத்தன்மையும் சமூகப் பொறுப்புணர்வும், கூட்டரசு அரசுப் பணியை நாடும் சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மலேசிய இந்தியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாகும்.
இதன் பொருள் தகுதி அடிப்படையிலான தேர்வு முறையைக் கைவிட வேண்டும் என்பதோ, பணிக்குத் தேவையான அடிப்படைத் தொழில்முறைத் தரநிலைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்பதோ அல்ல.
மாறாக, தகுதியும் திறமையும் கொண்டிருந்தும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலைகளால் வாய்ப்புகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு நியாயமான அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.
அந்த வகையில், பொருத்தமான இடங்களில் அரசுப் பணிக்கான நுழைவுத் தகுதிகளை மீளாய்வு செய்தல், விண்ணப்பதாரர்களுக்கான ஆயத்தப் பயிற்சிகளை வழங்குதல், மாற்று ஆட்சேர்ப்பு வழிமுறைகளை உருவாக்குதல், பின்தங்கிய பின்னணியைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.
2027–2029: மூன்றாண்டுச் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம்
இந்தப் பின்னணியில், கூட்டரசு அரசுப் பணியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், 2027 முதல் 2029 வரையிலான மூன்றாண்டுக் காலத்திற்குச் சிறப்பு மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு மடானி அரசாங்கத்தை ACE வலியுறுத்துகிறது.
குறிப்பாக, இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ள அமைச்சுகளிலும் அரசுத் துறைகளிலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இத்திட்டம் முன்னுரிமை வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், அளவிடக்கூடிய ஆட்சேர்ப்பு இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேவேளையில், அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் எதிர்கொள்ளும் தடைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு, அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், B40 பிரிவைச் சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களும் தொடக்கக் கட்ட பயிற்சிகளும் வழங்கப்படுவதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்த ஆண்டறிக்கைகளும் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும்.
சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காக உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையைக் கடைப்பிடிக்க முடியுமென்றால், அதே உறுதியையும் அக்கறையையும் சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய இந்தியர்களுக்கான கூட்டரசு அரசுப் பணி வாய்ப்புகளை மேம்படுத்துவதிலும் வெளிப்படுத்த முடியாததற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது.
இது வெறும் புள்ளிவிவரங்களைப் பற்றிய பிரச்சினை அல்ல.
தலைமுறைகளாகத் தங்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தப் போராடிவரும் ஒரு சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு நியாயமான வாய்ப்புகளை உருவாக்குவது பற்றிய விவகாரமாகும்.
சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமூக நீதி ஆகியவற்றின் மீதான மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாடு, வெறும் கொள்கை அறிவிப்புகளாக நின்றுவிடக்கூடாது.
அந்த உறுதிப்பாடு மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளாகவும், அளவிடக்கூடிய முன்னேற்றங்களாகவும் வெளிப்பட வேண்டும்.

இந்திய அரசுசாரா அமைப்புகளின் கூட்டமைப்பு – (ACE)
மாற்றத்திற்காகக் குரல் கொடுப்போம்; சமூகத்தை வலுப்படுத்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *