கோலாலம்பூர், 9 ஏப்ரல் 2026.
09.04.2026

கோலாலம்பூர், 9 ஏப்ரல் 2026 – அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) மலேசியா, ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் பிரதிஷ்டை விழாவை ஸ்ரீ ஜகந்நாத மந்திர் கோலாலம்பூர் கோவிலில் 18 முதல் 20 ஏப்ரல் 2026 வரை கொண்டாடவுள்ளது. இந்த விழா, அக்ஷய திருதியை என்னும் மங்களகரமான நாளில் நிகழவிருக்கிறது.
இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரால் நிறுவப்பட்ட இந்த இயக்கம், பக்தி யோகம் மற்றும் வேத ஞானத்தின் போதனைகளை உலகளவில் பகிர்வதிலும், பக்தி சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களையும் ஆன்மீக சமூகங்களையும் நிறுவுவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.

விக்ரஹ பிரதிஷ்டை என்று அழைக்கப்படும் இந்த புனிதமான விழா, கோவிலுக்கும் பரந்த சமூகத்திற்கும் ஒரு முக்கியமான ஆன்மீக இலக்கைக் குறிக்கிறது. இஃது ஒரு பாரம்பரிய வேத சடங்காகும். இதில் பகவான் விக்ரஹ வடிவில் வெளிப்பட அழைக்கப்பட்டு, வழிபாடு, தியானம் மற்றும் பக்தி சேவைக்காக கோவிலுக்குள் ஒரு தெய்வீக இருப்பை நிலைநாட்டுகிறார்.
இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் பளிங்குத் திருவுருவங்கள், தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய செழுமையான பக்தி மற்றும் கலாச்சார மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில், பிரதிஷ்டை செய்யப்படுகின்றனர்.
தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதரின் போதனைகளின்படி, பகவானின் திருவுருவம் சாட்சாத் பகவானே ஆவார். இந்த பிரதிஷ்டையின் மூலம், அனைவரும் பிரார்த்தனை, சேவை மற்றும் கோயில் நடவடிக்கைகளில் பங்கேற்பதன் வழியாக ஆன்மீக பலனை அடைவார்கள்.
கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர் கோயிலின் இணைத் தலைவரான ஶ்ரீமன் கிருபா சிந்து கிருஷ்ண தாஸ் அவர்கள், இந்த விக்ரஹ பிரதிஷ்டை என்பது வெறும் விழா மட்டுமல்ல, இது வரும் தலைமுறைகளுக்குப் பயனளிக்கும் ஓர் அர்த்தமுள்ள முக்கியக்கட்டம் என்றும், தனிநபர்களும் குடும்பங்களும் அமைதி, தியானம் மற்றும் ஆன்மீகத் தொடர்புக்காக நாடக்கூடிய ஒரு புனிதமான ஸ்தலத்தை இஃது உருவாக்கும் என்றும் கூறினார்.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் பாரம்பரிய வேத சடங்குகள், பக்தி விழாக்கள் மற்றும் பிரசாதம் விநியோகம் ஆகியவை இடம்பெற்று, வருகையாளர்களுக்கு ஓர் அர்த்தமுள்ள கலாச்சார மற்றும் ஆன்மீக அனுபவத்தை வழங்கும்.
இந்த திருவிழா, நிலையான எண்ணற்ற பலன்களைத் தரக்கூடிய அக்ஷய திருதியை நாளில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, போகா மற்றும் பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளின் மூலம் பொதுமக்களும் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர், இளைஞர் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆன்மீக மற்றும் சமூக அடிப்படையிலான நிகழ்ச்சிகள் மூலம், இளைஞர்கள் நேர்மறையான செயல்களில் ஈடுபடவும், வலுவான அறநெறிகளை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சிகள், கலாச்சாரப் புரிதலையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் வளர்ப்பதோடு, இளைஞர்களை சமச்சீரான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இயக்குநர் ஶ்ரீமதி சாந்தி ரூபா தேவி தாசி அவர்கள், இந்த நிகழ்வு தனிநபர்களும் குடும்பங்களும் ஒன்றுகூடுவதற்கும், அமைதியான சூழலை அனுபவிப்பதற்கும், ஆன்மீக மற்றும் கலாச்சார நெறிகளுடன் இணைவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று மேலும் கூறினார். மத, இன, பின்னணி பேதமின்றி இந்த நிகழ்வு அனைவருக்கும் திறந்திருக்கும் என்றும், இளைஞர்கள் வலுவான பண்புகளுடனும் வழிகாட்டுதலுடனும் வளர்வதற்கு ஒரு நல்ல சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
கோலாலம்பூர் ஸ்ரீ ஜகந்நாத மந்திர், ஆன்மீக நல்வாழ்வையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்குடன், உணவு விநியோகத் திட்டங்கள், கலாச்சாரப் பரப்புரை மற்றும் கல்விச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் 1985 முதல் சமூகத்திற்குச் சேவை செய்து வருகிறது.
பொதுமக்கள் விக்ரஹ பிரதிஷ்டை விழாவில் கலந்துகொண்டு இந்த அர்த்தமுள்ள நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
மேல் விவரங்களுக்கு கீழ்காணும் இணயத்தலத்தையும் சமூக ஊடகங்களையும் வலம் வருங்கள்: www.iskconkl.com.my















