செப்டம்பர் 14, 2026

கேரளா: மலேசியா–கேரளா கல்வி மற்றும் ஆன்மிக உறவை வலுப்படுத்தும் வகையில், மலேசிய பிரதிநிதிகள் குழுவினர் மார்கஸ் ஸகாஃபத்தி சுன்னியாவில் நடைபெற்ற சிறப்பு திக்ர் மற்றும் துஆ நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த சிறப்பு நிகழ்வில் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு வாய்ந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் கிராண்ட் முஃப்தி ஷேக் அபூபக்கர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆன்மிகம் மற்றும் அறிவார்ந்த பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.
நிகழ்வின்போது, மலேசிய பிரதிநிதிகள் குழுவினர் சிறப்பாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக, ஷேக் அபூபக்கர் அறக்கட்டளையின் ‘சிறந்த பங்களிப்புக்கான விருது’ வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை மிகவும் பணிவுடன் ஏற்றுக்கொண்ட அவர், இந்த கௌரவத்தை தனிப்பட்ட சாதனையாக கருதாமல், சமூகத்தில் அறிவையும் ஆன்மிக விழுமியங்களையும் வளர்ப்பதற்காக தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து வரும் உலமாக்கள், தஃவா பணியாளர்கள், அறிஞர்கள் மற்றும் அறிவை நேசிப்பவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார்.
“இது தனிப்பட்ட கௌரவம் அல்ல. அறிவு, ஆன்மிகம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி வரும் அனைத்து உலமாக்கள், தஃவா செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவை நேசிப்பவர்களுக்குமான அங்கீகாரம்” என்ற அடிப்படையில் அவர் தனது நன்றியையும் பணிவையும் வெளிப்படுத்தினார்.
மேலும், மலேசியா தொடர்ந்து உலமாக்களுடன் இணைந்து கல்வி மற்றும் மார்க்க அறிவு சார்ந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, ஹதீஸ் நூல்களின் கத்தம், மார்க்க நூல்களின் தொடர் பயிற்சி மற்றும் பாரம்பரிய இஸ்லாமிய கல்வி முறைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் மலேசியா–கேரளா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என கூறப்பட்டது.
மலேசியாவுக்கும் கேரளாவுக்கும் இடையிலான இந்த அறிவியல், ஆன்மிக மற்றும் கல்வி சார்ந்த தொடர்புகள் இரு சமூகங்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், அறிவுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் முக்கிய பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முயற்சிகள் மூலம் உறுதியான நம்பிக்கை, விரிவான அறிவு மற்றும் உயர்ந்த நற்பண்புகளைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
“இன்ஷா அல்லாஹ், மலேசியா தொடர்ந்து அறிவு மற்றும் ஆன்மிகப் பணிகளுக்கு ஆதரவாக இருக்கும். உலமாக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும்” என தெரிவிக்கப்பட்டது.















