அரசியல் வேறுபடலாம்; மக்களின் உரிமை வேறுபடக்கூடாது எதிர்க்கட்சி மாநிலங்களுக்கும் உதவி தொடரும் – அமைச்சர் ரமணன் உறுதி

­கோலாலம்பூர், செப். 12

– அரசியல் வேறுபாடுகள் மக்களுக்குச் சேவை செய்வதற்கு ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என வலியுறுத்திய மக்கள் நீதி கட்சியின் (பி.கே.ஆர்) உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் நிர்வகிக்கும் மாநிலங்களுக்கும் மடாணி அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்கும் என உறுதியளித்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசு, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்களின் நலனுக்கே முன்னுரிமை அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக கிளந்தான் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் மத்திய அரசு தொடர்ந்து ஒத்துழைத்து, மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் என அவர் கூறினார்.

குடிநீர் விநியோகம், வெள்ளத் தடுப்பு, சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் நேரடிப் பிரச்சினைகளுக்கு மத்திய–மாநில அரசுகளின் இணைந்த செயல்பாடு அவசியம் என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

“தேர்தலில் அரசியல் போட்டிகள் இருக்கலாம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி சேவை செய்வதே பொறுப்புள்ள அரசாங்கத்தின் கடமை,” என அவர் வலியுறுத்தினார்.

அரசியல் சர்ச்சைகளில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதல்ல அரசாங்கத்தின் வெற்றி; மாறாக மக்களின் எத்தனை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்பதே அரசாங்கத்தின் வெற்றியை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *