புதுடெல்லி, செப். 12

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்தியப் பயணத்தின்போது திட்டமிடப்பட்டிருந்த தமிழ்நாடு விஜயம் ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும், நேர நெருக்கடியே அதற்கான முக்கிய காரணம் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக தவறான வதந்திகளையும் போலிச் செய்திகளையும் பரப்புவதை பொறுப்பற்ற தரப்பினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் ரமணன், நாட்டின் நலனுக்கே எப்போதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றார்.
இங்கு நடைபெறும் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு இடையே மலேசிய ஊடகங்களிடம் பேசிய அவர், பிரதமர் அன்வாரின் இந்தியப் பயணத் திட்டம் வழக்கத்தைவிட மிகவும் அடர்த்தியாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் எத்தியோப்பியப் பிரதமர் ஆகியோருடனான உயர்மட்ட இருதரப்பு சந்திப்புகளுடன், பன்னாட்டுத் தொழில் அதிபர்களுடனான பேச்சுவார்த்தைகளும் பிரதமரின் பயணத் திட்டத்தில் இடம்பெற்றிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புகள் மூலம் முதலீடு, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மலேசியாவுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 10ஆம் தேதி லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பினரின் அலுவலகங்களாலும் சந்திப்புக்கான நேரத்தை உரிய முறையில் ஒருங்கிணைக்க முடியாமல் போனதாக அமைச்சர் ரமணன் விளக்கமளித்தார்.
புதிய பயணத் திட்டத்தின்படி, புதுடெல்லி நிகழ்வுகளை நிறைவு செய்யும் பிரதமர் அன்வார், செப்டம்பர் 13ஆம் தேதி கேரளாவுக்கும், செப்டம்பர் 15ஆம் தேதி மாலத்தீவுக்கும் பயணம் மேற்கொண்டு, மலேசிய தினத்திற்கு முன்னதாக தாயகம் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் மற்றும் எத்தியோப்பியாவின் தலைவர்கள் விரைவில் மலேசியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அப்போது புதுடெல்லியில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்கள் குறித்து மேலும் கலந்துரையாடப்படும் என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.















