தேதி: 12 ஜூன் 2026
36 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி – பிரதான போட்டி பிஎன் – பிஎச் கூட்டணிகளுக்கு இடையே என அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு
ஜொகூர் பாரு, ஜூன் 12: மலேசியாவின் ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களின் தேதிகளை தேர்தல் ஆணையம் (EC) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜொகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதியும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் ஆகஸ்ட் 1-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த இரு மாநிலங்களிலும் மொத்தமாக 36 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
தேர்தல் ஆணையத் தலைவர் ரம்லான் ஹரூன் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஜொகூர் மாநிலத்தில் முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் தேர்தல் பிரச்சார காலம் அமையும்.
நெகிரி செம்பிலானில் முன்கூட்டிய வாக்களிப்பு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும். ஜூலை 18-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ள நிலையில், அங்கும் 14 நாட்கள் பிரச்சார காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜொகூர் மாநிலத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர். நெகிரி செம்பிலானில் சுமார் 9 இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தலை சீராகவும் பாதுகாப்பாகவும் நடத்தும் நோக்கில், ஜொகூரில் 1,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 43,000-க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த மாநிலத் தேர்தலுக்காக RM86.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நெகிரி செம்பிலானில் 440-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 15,000-க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தத் தேர்தலுக்கான செலவுத் திட்டமாக RM80.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி, பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும், முக்கியமான அரசியல் மோதல் தற்போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணிகளுக்கிடையே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு மாநிலத் தேர்தல்களின் முடிவுகள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலை, மக்கள் ஆதரவு மற்றும் எதிர்கால அரசியல் கூட்டணிகளின் வலிமையை அளவிடும் முக்கியமான அரசியல் சோதனையாகக் கருதப்படுகின்றன. எனவே, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் தேசிய அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
















