திருவனந்தபுரம், ஜூன் 30.2026

இந்திய துறைமுக உள்கட்டமைப்புத் துறையில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய வெளிநாட்டு தனியார் முதலீடாக, சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பல் போக்குவரத்து நிறுவனமான மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனி (MSC Group), கேரள மாநிலத்தின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் மாற்று (Transshipment) துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை 1.397 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,220 கோடி) முதலீட்டின் மூலம் கையகப்படுத்துகிறது.
இந்த முக்கிய முதலீடு, MSC நிறுவனத்தின் துறைமுக முதலீட்டு மற்றும் கண்டெய்னர் முனைய இயக்கப் பிரிவான Terminal Investment Limited (TiL) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் லிமிடெட் (APSEZ) மற்றும் Adani Vizhinjam Port Private Limited (AVPPL) இடையே அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் விழிஞ்சம் துறைமுகம் உலகளாவிய மாற்று சரக்கு மையமாக (Global Transshipment Hub) மேலும் வலுவாக உருவெடுக்கும் என்று தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இருப்பினும், இந்த முதலீட்டு ஒப்பந்தம் பல்வேறு ஒழுங்குமுறை மற்றும் அரசின் அனுமதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
வேகமாக வளர்ந்து வரும் விழிஞ்சம்
APSEZ நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஷ்வானி குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழிஞ்சம் துறைமுகம் வெறும் 18 மாத செயல்பாட்டிலேயே 20 லட்சம் TEU (Twenty-foot Equivalent Unit) சரக்குகளை கையாளும் சாதனையை படைத்த முதல் இந்திய துறைமுகமாக மாறியுள்ளது. MSC உடனான இந்த கூட்டணி இந்தியாவின் உலக வர்த்தக இணைப்பை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
MSC நிறுவனத்தின் உலகளாவிய கப்பல் சேவை வலையமைப்பின் ஆதரவால், எதிர்காலத்தில் விழிஞ்சம் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வங்கதேச ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகள், தற்போது தென்கிழக்கு ஆசிய துறைமுகங்கள் வழியாகச் செல்லும் போக்கிலிருந்து விழிஞ்சம் நோக்கி மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய வர்த்தக பாதைகளிலும் விழிஞ்சத்தின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்று துறைமுக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் முதல் ஆழ்கடல் மெகா மாற்று துறைமுகம்
2024 டிசம்பரில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த விழிஞ்சம் துறைமுகம், இந்தியாவின் முதல் இயற்கை ஆழ்கடல் (18 முதல் 20 மீட்டர் ஆழம்) கொண்ட மெகா மாற்று துறைமுகமாகும்.
தற்போது ஆண்டுக்கு 16 லட்சம் TEU சரக்குகளை கையாளும் திறன் கொண்டுள்ள இந்த துறைமுகம், நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தவுடன் 2028 டிசம்பருக்குள் 57 லட்சம் TEU வரை திறன் பெறும். இதன் மூலம் தற்போதைய திறனைவிட சுமார் 3.5 மடங்கு அதிகரிக்கும்.
துறைமுகத்தில் 2.9 கிலோமீட்டர் நீள அலைத்தடுப்பு சுவர், 800 மீட்டர் நீள கப்பல் நிறுத்துமிடம், 8 அதிநவீன Quay Cranes, 24 முழுமையாக தானியங்கி Yard Cranes உள்ளிட்ட உலகத் தரத்திலான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட Vessel Traffic Management System (VTMS) மூலம் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. முழுமையாக தானியங்கி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்தியாவின் முதல் துறைமுகம் என்ற பெருமையையும் விழிஞ்சம் பெற்றுள்ளது.
சாதனைகள் தொடர்கின்றன
செயல்பாட்டின் முதல் ஆண்டிலேயே விழிஞ்சம் துறைமுகம் 615 கப்பல்களையும் 13 லட்சம் TEU சரக்குகளையும் கையாண்டு, மிக வேகமாக 10 லட்சம் TEU இலக்கை கடந்த இந்திய துறைமுகமாக சாதனை படைத்தது.
18 மாதங்களில் 20 லட்சம் TEU மற்றும் 950 கப்பல்களை கடந்த நிலையில், 2026 ஜூன் மாதத்தில் தனது 1,000-வது கப்பலையும் வரவேற்று மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
இதுவரை 70-க்கும் மேற்பட்ட Ultra Large Container Vessels (ULCVs), 300 மீட்டருக்கும் அதிக நீளமுடைய 283 மிகப்பெரிய கப்பல்கள் மற்றும் 16 மீட்டருக்கும் அதிக ஆழம் தேவைப்படும் 98 பிரம்மாண்ட கப்பல்களை வெற்றிகரமாக கையாள்ந்துள்ள இந்தியாவின் முன்னணி ஆழ்கடல் துறைமுகமாக விழிஞ்சம் திகழ்கிறது.
இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்திற்கு புதிய திருப்புமுனை
இந்த முதலீடு வெறும் பங்கு பரிவர்த்தனை மட்டுமல்ல; இந்தியாவின் கடல்சார் வர்த்தகம், ஏற்றுமதி–இறக்குமதி துறை, சர்வதேச சரக்கு மாற்று சேவைகள் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Global Supply Chain) நாட்டின் பங்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தும் முக்கியமான வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச கப்பல் போக்குவரத்து சந்தையில் MSC நிறுவனத்தின் வலுவான ஆதரவும், அதானி குழுமத்தின் துறைமுக மேலாண்மை அனுபவமும் இணைவதன் மூலம், விழிஞ்சம் துறைமுகம் எதிர்காலத்தில் சிங்கப்பூர், கொழும்பு மற்றும் துபாய் போன்ற உலகத் தரத்திலான மாற்று துறைமுகங்களுக்கு போட்டியாக உருவெடுக்கும் என கடல்சார் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.















