புத்ராஜெயா, மே 27

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று நடைபெற்ற ஹரிராயா ஐதிலாதா தொழுகையில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொதுமக்களுடன் இணைந்து Masjid Putra பள்ளிவாசலில் தொழுகை நிறைவேற்றினார்.
காலை 7.56 மணியளவில் தனது மனைவி Wan Azizah Wan Ismail உடன் பள்ளிவாசலுக்கு வந்த பிரதமரை, Jabatan Kemajuan Islam Malaysia (JAKIM) இயக்குநர் ஜெனரல் டத்துக் டாக்டர் சிராஜுடின் சுஹைமி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் இப்ராஹிம் பொதுமக்களுடன் இணைந்து தக்பீர் ராயாவை முழங்கினார். பின்னர் நடைபெற்ற சுனத் ஐதிலாதா தொழுகையை மச்ஜித் புத்ராவின் தலைமை இமாம் டாக்டர் முகம்மது ஸகுவா ரொட்ஸாலி முன்னிலை வகித்து நடத்தினார்.
தொழுகைக்கு பின் “தியாகத்திற்கு உண்மையான நேர்மையும் இறைபக்தியும் அவசியம்” என்ற கருத்தை மையமாகக் கொண்ட “Sacrifice Demands Sincerity” எனும் தலைப்பில் சிறப்பு உரையும் இடம்பெற்றது. அந்த உரையில், ஐதிலாதா திருநாளின் உண்மையான அர்த்தமான தியாகம், ஒற்றுமை மற்றும் மனிதநேயம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் பள்ளிவாசலில் கூடியிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். அவரது வருகையால் பள்ளிவாசல் வளாகம் உற்சாகமான மற்றும் ஆன்மிக நெருக்கம் நிறைந்த சூழலாக மாறியிருந்தது.
இந்த ஆண்டைய ஐதிலாதா கொண்டாட்டம் நாட்டின் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் சமுதாய நல்லிணக்கத்தை பிரதிபலிப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.














