தேதி: 14 மே 2026 – கோலாலம்பூர்
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கால்பந்து திருவிழா ஜூன் 13ஆம் தேதி

சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், கிள்ளான் பள்ளத்தாக்கு பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 22ஆவது மாநில அளவிலான தமிழ்ப்பள்ளி கால்பந்து போட்டி எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் விளையாட்டு விழாவில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 65 ஆண்கள் அணிகளும் 34 பெண்கள் அணிகளும் களமிறங்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளன.
போட்டிகள் அனைத்தும் காலை 8.00 மணி முதல் ஆர்ஆர்ஐ விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழுத் தலைவர் பத்துமலை தெரிவித்தார். மேலும், இப்போட்டியை சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றமும் இணைந்து நடத்துவதாக அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் குழு ஒருங்கிணைப்பு போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் நோக்கிலும் இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் பிரிவில் முதல் 16 இடங்களைப் பெறும் அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. முதலிடம் பெறும் அணிக்கு பெருமைக்குரிய ‘நமசிவாய’ சுழற்கிண்ணம் வழங்கப்படும்.
அதேவேளை, பெண்கள் பிரிவில் முதல் 12 இடங்களை வெல்லும் அணிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ‘ரவிந்திரன்’ சுழற்கிண்ணம் வழங்கப்படவுள்ளது.
இந்தப் போட்டிக்கான அணிப் பிரிவு குலுக்கல் நிகழ்ச்சி இன்று சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து கிடைத்து வரும் அபாரமான ஆதரவு இந்நிகழ்ச்சிக்கு பெரும் உற்சாகத்தை அளிப்பதாக பத்துமலை தெரிவித்தார்.
“தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறமைகளை மாநில அளவில் வெளிக்கொணரும் ஒரு சிறந்த தளமாக இந்தப் போட்டி அமையும். விளையாட்டின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் போட்டித்திறன் மேம்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான இந்த கால்பந்து போட்டி, மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு மட்டுமன்றி, தமிழ்ப்பள்ளிகளுக்கிடையேயான ஒற்றுமையையும் உறவையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.














