தேதி: 25 ஏப்ரல் 2026 குபாங் செமாங், பினாங்:


புலாவு பினாங் மாநிலத்திற்கு மேற்கொண்ட தனது பணிப் பயணத்தை நிறைவு செய்யும் வகையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம், குபாங் செமாங் பகுதியில் அமைந்துள்ள தேசிய தகவல் பரப்பல் மையம் (NADI) சென்றார். அங்கு மலேசிய தொடர்பு மற்றும் பன்மாத்ய ஆணையம் (MCMC) ஏற்பாடு செய்த NADI அங்கீகார விழாவில் அவர் கலந்துகொண்டார். இந்த மையம், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) “டிஜிட்டல் மாற்ற மையம்” என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “டிஜிட்டல் மாற்றம்” என்ற சொல் பெரிதும் பேசப்பட்டாலும், அது நகர்ப்புற உயர்வட்டாரங்களுக்குள் மட்டுமே சுழலுமானால், சமூக இடைவெளியை மேலும் பெருக்கக்கூடும் என எச்சரித்தார். இதனை சமநிலைப்படுத்தும் முயற்சியாக, NADI போன்ற திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளை கொண்டு செல்லும் முக்கிய பங்காற்றுகின்றன என்று அவர் கூறினார்.



மதானி அரசின் நோக்கம் தெளிவானது என்றும், டிஜிட்டல் வளர்ச்சி புதிய சமூக இடைவெளிகளை உருவாக்காமல், வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பாலமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது சமூக முன்னேற்றத்திற்கும், பொருளாதார உயர்விற்கும் வழிவகுக்கும் ஒரு முக்கிய தளமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தரமான கல்விக்கு சமஅணுகல் வழங்கும் கொள்கையுடனும் இந்த முயற்சி இணங்குகின்றது. ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும், தரமான கல்வியும் டிஜிட்டல் திறன்களும் அடிப்படை உரிமையாக கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
NADI போன்ற முன்முயற்சிகளின் மூலம், முன்பு பின்தங்கியிருந்த இளைஞர்கள் தற்போது டிஜிட்டல் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் புதிய வருமான வாய்ப்புகளை அடையும் நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, தொழில்நுட்ப முன்னேற்றத்தை நாடும் வேகத்தில் மதம், நெறிமுறைகள் மற்றும் பண்பாடு புறக்கணிக்கப்படக்கூடாது எனவும் பிரதமர் நினைவூட்டினார். அடையாளம் இழந்த முன்னேற்றம், சமூகத்தின் திசையையும் மதிப்பையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
இத்தகைய முயற்சிகள் மூலம், டிஜிட்டல் அறிவு பெற்றதோடு, மதிப்புகளிலும் வேரூன்றிய ஒரு தலைமுறையை உருவாக்குவதே அரசின் நோக்கம் எனவும் அவர் முடிவுரை செய்தார்.















