தலைவர் பதவியில் நீடிக்க காரீம் இப்ராஹிம் தகுதியானவரா?  -விளையாட்டு ஆணையர் கேள்வி

கோலாலம்பூர் ஏப் 17 2026

முறைகேடுகளை எதிர்நோக்கி உள்ள மலேசிய தடகளத் தலைவர் காரீம் இப்ராஹிம் அந்த பதவியில் நீடிக்க தகுதியானவரா? என விளையாட்டு ஆணையர் அரிஃபின் கானி கேள்வி எழுப்பினார்.

இது குறித்து முறையான விளக்கத்தை தரும் படி உலக தடகள சம்மேளனத்திற்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காரீமின் தற்போதைய நிலை குறித்து முரண்பாடான தகவல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த ஜனவரி மாதம் உலக தடகள அமைப்பால் மலேசிய தடகள சங்கத்திற்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் கடிதம் குறித்து தகவலைத் தொடர்ந்து அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இருப்பினும் மலேசிய தடகள சங்கத்துடனான தமது அண்மைய கலந்துரையாடல்களின் போது இக்கடிதம் குறித்து இவ்வித கேள்வியும் எழுப்பப்படவில்லை என்றார் அவர்.

உலகத் தடகள அமைப்பிடமிருந்து கடிதம் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விவகாரங்கள் குறித்து கேட்க தமது அலுவலகம் மலேசிய தடகள சங்கத்திற்கு கடிதம் எழுதும் என அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உலக தடைகளை அமைப்புக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் சொன்னார்.

ஆனால் உலக தடகள அமைப்பின் தலைவர் லார்ட் செபஸ்டியன் கோ தற்போது வெளியில் இருப்பதால் இதற்கான பதில் வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த வாரம் செயற் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட உலக தடகள அமைப்பின் கடிதத்தில், 2018-ல் அப்போதைய சர்வதேச கூட்டமைப்பால் விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து காரீம் இன்னும் தகுதியற்றவ ராகவே நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவர் ஒரு கவுன்சில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என எடுக்கப்பட்ட அந்த முடிவு, 2019-ல் விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது

தமக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை காரீம் மறுத்துள்ளார்.

இவ்வார தொடக்கத்தில் சிலாங்கூர் தடகள சங்கத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள்-டத்தோ எஸ்.எம். முத்து, கே. பிரகாஷ்,ஆர். முருகன், ஜி. மோகன், முகமட் ஃபௌசி, நனிவாணன் அப்துல்லா மற்றும் எஸ். குணசீலன் ஆகியோர் மாநில சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இது தேசிய அமைப்பையும் பாதிக்கக்கூடும்.

மாநில சங்கத்தின் அரசியலமைப்பை மீறியதாக கூறி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தக் குழுவினருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைகளை எதிர்ப்பது மட்டுமல்லாமல், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மலேசிய தடகள சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தின் சட்டபூர்வமான தன்மையும் கேள்வி க்குள்ளாக்குவதாக முத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *