வாசிப்பில் நேசிப்பு, பற்று, ஆர்வம் அதிகப்படுமானால் வளர் தமிழ் நூல் படைப்புகள் தடையின்றி வெற்றியை நோக்கிப் பயணிக்கும்!- டாக்டர் ஷியாம் பிரசாத் அறிவுறுத்து

சிலாங்கூர், 21 ஏப்ரல் 2026

தமிழ் மொழி வளர்ச்சிக்கான வாசிப்பு பழக்கம், நேசிப்பு மற்றும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வகையில் நடைபெற்ற சாதனையாளர்கள் விருது விழா, சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் பண்பாட்டிற்கும் சமூக சேவைக்கும் முக்கிய பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விழாவில் முக்கியமாக, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்மணிகள் “தமிழ்மாமணி” விருதால் கௌரவிக்கப்பட்டனர். ஆர்.ஆர்.ஐ தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி புஷ்பராணி கிருஷ்ணன், பெஸ்தாரி ஜெயா பகுதியைச் சேர்ந்த சமூகச் சேவையாளர் திருமதி ஜெகதீஸ்வரி வேலு, கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் திருமதி புஷ்பா நாகையா வெங்கடேசன் ஆகியோர் தங்களின் சமூக மற்றும் கல்விசார் பங்களிப்பிற்காக பொன்னாடை அணிவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டனர்.

இதனுடன், தமிழுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் பலரும் விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். பந்திங் பகுதியைச் சேர்ந்த கவிமாமணி எஸ்.எஸ். மணிமாறன், சிரம்பான் கலைக்காவலர் மைக்கல் பீமன், தமிழ் மலர் இதழின் கு. தேவேந்திரன், சமூகச் சிந்தனையாளர் தமிழ் நேசன் கே.ஏ. குணா, எழுத்தாளர் ந. மாரியப்பன், எம். கருணாகரன், தொழிலதிபர் டத்தோ கீதாஞ்சலி ஜி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பை செம்மை சுமா. செல்வராஜ் திறம்பட மேற்கொண்டார். ஓய்வு பெற்ற முன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் குணசேகரன் சடையன் நிகழ்ச்சி நெறியாளராக சிறப்பாகப் பணியாற்றினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இனிய நந்தவனம் இதழாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் தங்களது படைப்பாற்றலால் இதழின் வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், ஆண்டுதோறும் தமிழ்ச் சேவையாளர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை உலகளவில் பரப்பும் நோக்கத்துடன் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள், சமூகத்தில் மொழிப் பற்றையும் வாசிப்பு ஆர்வத்தையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. விழா, நந்தவனம் சந்திரசேகரனின் நன்றியுரையுடன் நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *