குவாலா லம்பூர், ஏப்ரல் 15 —

மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள எரிசக்தி நெருக்கடியைத் தொடர்ந்து எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக போலி செய்திகள் பரப்பிய குற்றச்சாட்டில் ஒருவருக்கு செப்பாங் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட உள்ளதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்துக் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார். இதனுடன், மேலும் ஐந்து பேருக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.
“ருவாங் பிச்சாரா” நிகழ்ச்சியில் ‘டபய்யுன் தலாம் கிரிசிஸ்: மெநங்கானி மக்லுமாட், மெஞ்ஜாமின் கெஸ்தபிலான்’ என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசிய அவர், மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) சமர்ப்பித்த 12 விசாரணை ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர் சட்ட மா அதிபர் அலுவலகம் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். மேலும் நான்கு வழக்குகளுக்கு எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் 29 முதல் இதுவரை, 441 போலி தகவல் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் அகற்றும் நடவடிக்கையில் உள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார். அவற்றில் பெரும்பாலானவை டீசல், RON95 மற்றும் RON97 போன்ற எரிபொருள் விலை உயர்வு குறித்த தவறான தகவல்களை உள்ளடக்கியவை எனவும் கூறினார்.
மேலும், மலேசிய அரசு கப்பல்களை விடுவிக்க ஈரானுக்கு சுங்க கட்டணம் செலுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு உள்ளிட்ட 147 போலி தகவல்கள் பரவியுள்ளன. இதை அரசு உட்பட பல தரப்புகள் மறுத்துள்ளதாக அவர் விளக்கினார்.
சில பொறுப்பற்ற தரப்புகள் பிரதான ஊடகங்களின் வடிவமைப்பு மற்றும் லோகோக்களை போலியாக பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் மேற்கொள்வது குறித்து அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக சினார் ஹரியான், அவானி மற்றும் TV3 போன்ற ஊடகங்களை ஒத்த வடிவத்தில் போலி செய்திகளை உருவாக்கியுள்ள சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் எந்த தகவலையும் பகிர்வதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இதற்கிடையில், பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி ஹசன், சமூகம் குறிப்பாக முஸ்லிம்கள் ‘டபய்யுன்’ என்ற கருத்தை கடைப்பிடிப்பது மிக முக்கியம் என வலியுறுத்தினார்.
“டபய்யுன் என்பது தகவலை சரிபார்க்காமல் உடனே பகிராமல், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வது என்ற அர்த்தம் கொண்டது. தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க இது அவசியமான நடைமுறை,” என அவர் கூறினார்.
மேலும், தகவல்களை உறுதி செய்யும் வரை அவற்றை பரப்புவதை தாமதப்படுத்துவது மற்றும் சம்பந்தப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதில் அவசரப்படாமல் இருப்பது டபய்யுனின் முக்கியக் கோட்பாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையை சமூகத்தில் வலுப்படுத்துவதற்காக அமைச்சகம் தொடர்ந்து ஒத்துழைப்புகளை மேம்படுத்தி, துல்லியமான தகவல்களை பரப்புவதில் சமூகத்தை ஈடுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.















