ஜொகூர் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள மக்கள் முன்னேற்றக் கட்சி (பிபிபி) முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், ஏப்ரல் 14, 2026

ஜொகூர் மற்றும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள மக்கள் முன்னேற்றக் கட்சி (பிபிபி) முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார். தேசிய முன்னணியின் (பரிசான் நேஷனல்) ஒரு முக்கிய அங்கமாக உள்ள பிபிபி, கூட்டணியின் தேர்தல் திட்டங்களுக்கு இணங்க தங்களது பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கூட்டணியின் உள்கட்டமைப்பில் தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. எங்களுக்கு வழங்கப்படும் எந்தத் தொகுதியிலும் வலுவான போட்டியை அளிக்க கட்சி தயாராக உள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை அறிய ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என டத்தோ லோகபாலா கூறினார்.

மேலும், கட்சியின் 73ஆம் ஆண்டு நிறைவு விழா பிபிபி உறுப்பினர்களுக்கு புதிய உற்சாகத்தையும் ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் கட்சி சுணக்கம் கண்டிருந்தாலும், தற்போது அது மீண்டும் எழுச்சி பாதையில் முன்னேறி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பிபிபி கட்சியின் வரலாற்றைப் பற்றி பேசுகையில், டி.ஆர். சீனிவாசகம் சகோதரர்கள் தொடங்கிய இந்தக் கட்சி, மலேசிய இந்திய சமூகத்தின் அரசியல் உரிமைகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றி வந்துள்ளது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

“இளைஞர்களை அதிகமாக ஈர்த்து, புதிய தலைமுறையை உருவாக்குவது எங்கள் அடுத்த கட்ட நோக்கம். அடித்தள அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் தேசிய அரசியலுக்கும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், பிபிபி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *