சிலாங்கூர் மாநில நீர் வாரியத்தின் “Box of Hope” திட்டம் – பி40 குடும்பங்களுக்கு பேருதவி
சபாக் பெர்னாம், டிசம்பர் 12

சமூக நலனில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வரும் சிலாங்கூர் மாநில நீர் வாரியமான (Air Selangor), சபாக் பெர்னாமில் உள்ள கம்போங் சுங்கை அப்போங் பகுதியிலுள்ள B40 குடும்பங்களுக்கு முக்கியமான உணவு உதவிப் பொருட்களை வழங்கி, மக்களின் தினசரி வாழ்க்கைக்கு பெரும் வலுச்சேர்த்துள்ளது.
மொத்தம் 150 உணவுப் பெட்டிகள் “Box of Hope” சமூக உதவி திட்டத்தின் கீழ் இன்று விநியோகிக்கப்பட்டன. ஒவ்வொரு பெட்டியிலும் அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை, மாவு, உடனடி உணவுப் பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வகை உலர் பொருட்கள் அடங்கியிருந்தன.
இந்த உதவி குறித்து, ஆயிர் சிலாங்கூர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் —
“எங்கள் Box of Hope முயற்சி, சமூகத்தில் உதவி தேவைபடுவோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வகையில் இந்த உதவி தொடரப்படும்” என்று தெரிவித்தது.
இந்த விநியோகப் பணிகளில் 17 Hydro Heroes தன்னார்வலர்கள் நேரடியாகக் களமிறங்கி, தளவாட மற்றும் பகிர்வு நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தனர். உள்ளூர் மக்களுடன் நேரடியாக இணைந்து செயல்பட்ட இந்த தன்னார்வலர்களின் பணி, சமூக ஒற்றுமையின் சிறந்த உதாரணமாக அமைந்தது.
2020 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் Box of Hope திட்டம், இதுவரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் உள்ள 8,543 B40 குடும்பங்களுக்கு உதவியுள்ளது. பொருளாதார சவால்கள், விலை உயர்வு போன்ற சூழ்நிலைகளில் வாழும் குடும்பங்களுக்கு இத்திட்டம் மிகுந்த நிவாரணமாக உள்ளது.
சமூக நலனைக் கவனிக்கும் ஒரு பொது நிறுவனம் என்ற வகையில், ஆயிர் சிலாங்கூர் தொடர்ந்து இத்தகைய உதவி திட்டங்களை விரிவுபடுத்தி, இன்னும் பல பி40 குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் குடிமக்கள், இந்த உதவி முயற்சிக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.















