புத்ராஜெயா | 22 செப்டம்பர் 2026

வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட் 2027), தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) துறையில் பயிலும் மற்றும் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக்கூடும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற பயிற்றுநர் மற்றும் மேம்பட்ட திறன் பயிற்சி மையமான CIAST-இன் 17ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், பட்ஜெட் தொடர்பான குறிப்பிட்ட விவரங்களை வெளியிடாமல், அடுத்த மாதம் வெளியாகவுள்ள அறிவிப்புகள் திவெட் பட்டதாரிகளுக்கு சாதகமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

“விரைவில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இங்குள்ள பட்டதாரிகள் பலர் மகிழ்ச்சியடையும் வகையில் அறிவிப்புகள் இடம்பெறும்,” என அவர் தெரிவித்தார்.
பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2027ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தை வரும் அக்டோபர் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, திவெட் துறையில் திறன் மற்றும் உயர்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான ஊதிய நிலவரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரமணன் தெரிவித்தார்.
முன்னதாக மாதம் சுமார் RM12,000 வரை இருந்த சில உயர்திறன் கொண்ட தொழிலாளர்களின் வருமானம் தற்போது RM16,000 வரை உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொழில்துறையினர் திவெட் தகுதி பெற்றவர்களின் திறனையும் தொழில்முறை அறிவையும் அதிகளவில் ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறியாக இந்த ஊதிய உயர்வை அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, திவெட் கல்வியை நிறைவு செய்த இளைஞர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகமான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“நம்பிக்கையும் வாய்ப்புகளும் இங்கு நிறைந்துள்ளன. எனவே, உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என அவர் பட்டதாரிகளிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் திவெட் பட்டதாரிகள் சிறந்த தொழில் வாய்ப்புகளையும் அதிக வருமானத்தையும் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியக்கமயமாக்கல் (Automation) போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி குறித்து திவெட் பட்டதாரிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ரமணன் தெரிவித்தார்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் முழுமையாக இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் தேவையற்றது எனக் குறிப்பிட்ட அவர், மாறிவரும் தொழில்சார் சூழலுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தங்களையும் தங்களது திறன்களையும் தொடர்ந்து மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
“நாம் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டும். நமக்கு முன் உள்ள அதிநவீன வாய்ப்புகளை நோக்கி முன்னேற வேண்டும்,” என்றார்.
தொழில்துறையில் மனிதர்களுக்கான பங்கு எப்போதும் தொடரும் எனக் குறிப்பிட்ட ரமணன், அதேவேளை புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியுடன் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளாமல் பின்தங்கிவிட்டால், பின்னர் மீண்டும் போட்டித்தன்மையைப் பெறுவது சிரமமாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
எனவே, வேலைவாய்ப்புச் சந்தையில் தங்களுக்கான தேவையை தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் திவெட் பட்டதாரிகள் தங்களது தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதுடன், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், CIAST-இன் 17ஆவது பட்டமளிப்பு விழாவில் ஷா ஆலாம் தலைமை மையம் உட்பட அதன் துணை வளாகங்களைச் சேர்ந்த மொத்தம் 929 மாணவர்கள் தங்களது டிப்ளோமா மற்றும் உயர் டிப்ளோமா படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பட்டம் பெற்றனர்.
தொழில்நுட்பம், திறன் பயிற்சி மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப மனிதவளத்தை உருவாக்குவதில் திவெட் கல்வியின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் பட்ஜெட் 2027 அறிவிப்புகள் இந்தத் துறையினரிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.















