நெகிரி செம்பிலான், ஜாலான் கோட்டா – 22 செப்டம்பர் 2026

நெகிரி செம்பிலான், ஜாலான் கோட்டாவில் பக்தர்களால் ‘டத்தோ கோயில்’ என அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர், ஸ்ரீ முனீஸ்வரர், ஸ்ரீ மகா சக்தி அம்மன் ஆலயத்தின் 34ஆம் ஆண்டு திருவிழா பக்தி உணர்வும் பாரம்பரிய சிறப்பும் நிறைந்து வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் பக்தர்கள் திரண்டதுடன், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து மதிய வேளையில் பாரம்பரிய சிறப்புமிக்க தீமிதி திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை நேரத்தில் நடைபெற்ற ரத ஊர்வலம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருள, பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ரதத்தை வழிபட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஆலய வளாகமும் சுற்றுப்புறப் பகுதிகளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வருகையால் களைகட்டியிருந்ததுடன், விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
34ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற ஆலய நிர்வாகம், விழா ஏற்பாட்டுக் குழுவினர், தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாரம்பரிய சமய நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு பக்தர்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.















