அமெரிக்கா – ஈரான் மோதல் தீவிரம்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் கவலை

2 செப்டம்பர் 2026, கோலாலம்பூர்:

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் குறித்து மலேசியப் பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான அண்மைய தாக்குதல் பரிமாற்றங்கள், சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் எல்லைகளைத் தாண்டி பிராந்தியத்தின் ஏனைய நாடுகளையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் மேலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பரந்தளவிலான போருக்குள் இழுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

நிலைமையை மாற்றியமைக்கும் அதிக ஆற்றல் கொண்ட தரப்பு, பதற்றத்தைத் தணிப்பதிலும் மேலும் இராணுவ நடவடிக்கைகள் விரிவடைவதைத் தடுப்பதிலும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார்.

மற்ற நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும், எந்தவொரு இராணுவ இலக்கையும் அடைவதற்காக அப்பாவி பொதுமக்கள் விரிவடைந்து வரும் போரின் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தூதரக முயற்சிகளுக்கு தடையாக அமையும் நடவடிக்கைகள், பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக நெருக்கடியை மேலும் மோசமடையச் செய்யக்கூடும் என பிரதமர் எச்சரித்தார்.

அமெரிக்காவும் ஈரானும் உடனடியாக மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி, ஜூன் மாதத்தில் எட்டப்பட்ட புரிந்துணர்வுகள் மற்றும் தூதரகப் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மோதலுக்கு இறுதியான தீர்வு இராணுவ நடவடிக்கைகளால் அல்ல; அரசியல் மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே எட்டப்பட முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய கிழக்கில் உருவாகக்கூடிய விரிவான பிராந்தியப் போரின் விலையை உலக நாடுகளும் பொதுமக்களும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதே மலேசியாவின் நிலைப்பாடு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *