நான் உங்களுக்காக இருக்கிறேன்” – இந்தியச் சமூகத்திற்கு பிரதமர் அன்வார் உறுதி

 

இந்திய சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொடர் நடவடிக்கைகள் அவசியம் – அமைச்சர் ரமணன்

கோலாலம்பூர், செப். 4 —

மலேசிய இந்தியச் சமூகத்தை நீண்டகாலமாகப் பாதித்து வரும் வறுமை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வாய்ப்புகள், தொழில்முனைவு மற்றும் குடியுரிமை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“நான் உங்களுக்காக இருக்கிறேன்” என்ற பிரதமரின் உறுதியான வார்த்தைகள், இந்தியச் சமூகத்தின் பிரதிநிதிகளுடனான அண்மைய சந்திப்பில் முக்கியத்துவம் பெற்றன.

புத்ராஜாயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் நேரடியாக எடுத்துரைத்தனர்.

இச்சந்திப்பு வெறும் பிரச்சினைகளைப் பட்டியலிடும் கலந்துரையாடலாக இல்லாமல், முன்வைக்கப்பட்ட விவகாரங்களுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளை உருவாக்கி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்கள், உதவிகள் மற்றும் மானியங்கள் உண்மையில் அவை தேவைப்படும் மக்களைச் சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதுடன், சேவை வழங்கும் முறைகளில் காணப்படும் குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தியச் சமூகத்தின் தேவைகள் குறித்து நேரடியாகக் கேட்டறிந்த பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் முன்வைக்கப்பட்ட விவகாரங்களை உரிய முறையில் பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஒன்பது இந்தியர் வர்த்தகச் சபைகள் மற்றும் 14 அரசு சாரா இந்திய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற இச்சந்திப்பு, இந்தியச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் குரலை நாட்டின் உயர்மட்ட அரசாங்கத் தலைமையிடம் நேரடியாகக் கொண்டு செல்லும் முக்கியமான தளமாக அமைந்தது.

கல்வி மற்றும் திறன் மேம்பாடு

சந்திப்பில் கல்வி மற்றும் திறன் பயிற்சி வாய்ப்புகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

இளைஞர்களுக்கு தரமான கல்வியுடன் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை வழங்குதல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி (TVET) வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், தொழில் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப திறன் பயிற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை, வழிகாட்டித் திட்டங்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத் துறைகளில் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

தொழில்முனைவோருக்கு கூடுதல் வாய்ப்புகள்

சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நடத்தி வரும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, அரசாங்கத்தின் தற்போதைய நிதி மற்றும் தொழில்முனைவு திட்டங்கள் சரியான இலக்குக் குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுடன், புதிய தொழில்களைத் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு

இந்திய சமூகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் வறுமை தொடர்பான பிரச்சினைகளுக்கும் இச்சந்திப்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

குறைந்த வருமானக் குடும்பங்கள், சமூகப் பாதுகாப்பு தேவைப்படும் மக்கள் மற்றும் அரசாங்க உதவிகளைச் சார்ந்துள்ள குடும்பங்களுக்கு உரிய உதவிகள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவற்றின் பயன் உண்மையில் இலக்குக் குடும்பங்களைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதே முக்கியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

குடியுரிமை விவகாரத்திற்கும் கவனம்

நீண்டகாலமாகத் தீர்வு எதிர்பார்த்து வரும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

ஆவணங்கள் மற்றும் குடியுரிமைப் பதிவுகள் தொடர்பாக எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு உரிய நடைமுறைகளின் அடிப்படையில் விரைவான தீர்வுகளை வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

மித்ராவின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டும்

மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

சமூகத்தின் உண்மையான தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வடிவமைத்து, அவை வெளிப்படையான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சென்றடையும் வகையில் மித்ராவின் செயல்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் ரமணன்: “தொடர் நடவடிக்கைகளே முக்கியம்”

இதனிடையே, பிரதமர் இந்தியச் சமூகத் தலைவர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கேட்டறிந்திருப்பது, இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு அரசாங்கம் வழங்கும் உயர்மட்ட முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இச்சந்திப்பிற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளே மிகவும் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார்.

“முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வெறும் குறிப்புகளாகவோ அல்லது விவாதங்களாகவோ மட்டும் நின்றுவிடக் கூடாது.

“ஒவ்வொரு விவகாரமும் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நடைமுறை நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும்,” என ரமணன் தெரிவித்தார்.

2027 வரவுசெலவுத் திட்டத்தில் கவனம்

இந்தியச் சமூகத் தலைவர்கள் முன்வைத்த பரிந்துரைகள், வரவிருக்கும் 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளின்போது கவனத்தில் கொள்ளப்படும் என்றும் ரமணன் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் உதவிகள் அறிவிக்கப்படுவதால் மட்டுமே அதன் வெற்றி நிர்ணயிக்கப்படாது என்றும், அவை உரிய இலக்குக் குழுவைச் சென்றடைந்து மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பதே முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“பிரதமர் இந்தியச் சமூகத்திற்கு தெளிவான உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

“அந்த உறுதிமொழியை செயல்பாடுகள் மற்றும் நற்பலன்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தற்போது நமது பொறுப்பு,” என ரமணன் மேலும் கூறினார்.

இரண்டாவது சந்திப்பு

பிரதமர் அன்வாருக்கும் இந்தியச் சமூகத் தலைவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பு இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.

முதல் சந்திப்பில் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இம்முறை அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள், அரசாங்கத்தின் பங்கு மற்றும் நடைமுறை ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம், இந்தியச் சமூகத்தின் கோரிக்கைகள் அரசாங்கத்தின் உயர்மட்ட கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதுடன், அவற்றைச் செயல்படுத்தும் பொறுப்பு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் மீது இருப்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தியச் சமூகத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கத்தின் உறுதிப்பாடு மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படும் நடவடிக்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதும், அவற்றின் பலன்கள் அடித்தட்டு மக்களை எந்த அளவிற்கு சென்றடைகின்றன என்பதும் சமூகத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *