26 ஆகஸ்ட் 2026 –

திருஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடனும், உறவுகளுடன் இணைந்தும் கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இனிய ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஓணம் என்பது வெறும் பண்டிகை கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், மனிதநேயம், குடும்ப ஒற்றுமை, பண்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் முக்கியமான திருநாளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு இதிகாசங்களும் புராணக் கதைகளும் இருந்தாலும், இந்நாளை முன்னிட்டு நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த ஒவ்வொரு வழக்கமும் நமது வாழ்வியலுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வீட்டைச் சுத்தம் செய்தல், எண்ணெய் தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல், பெரியோரை வணங்குதல், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல் உள்ளிட்ட ஒவ்வொரு செயலுக்கும் ஆழமான பண்பாட்டு மற்றும் வாழ்வியல் அர்த்தங்கள் உள்ளன.
“இந்த பாரம்பரியங்களின் பின்னணியையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் நாமும் அறிந்து கொள்வதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். பிறரும் புரிந்துகொள்ளும் வகையில் நமது பண்பாடுகளையும் பண்டிகைகளையும் கொண்டாடுவது அவசியம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகைகள் மனிதர்களிடையே அன்பையும், மனிதநேயத்தையும், ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. குடும்பத்தினரும் உறவினர்களும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் சமூக நல்லிணக்கமும் வலுப்பெறுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஓணம் பண்டிகையை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், சிக்கனத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடித்து கொண்டாடுமாறும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல இனங்களும், பல்வேறு பண்பாடுகளும் இணைந்து வாழும் மலேசிய நாட்டில், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தாரக மந்திரத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து திருஓணத்தை கொண்டாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான நோக்கம் நமது பண்பாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டுவதே எனக் குறிப்பிட்ட அவர், ஓணம் பண்டிகையின் சிறப்பையும் அதன் பண்பாட்டு விழுமியங்களையும் அனைவரும் உணர்ந்து கொண்டாட வேண்டும் என்று தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் அமைதியும், மகிழ்ச்சியும், வளமும் நிறைந்த இனிய திருஓணம் அமையட்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.















