ஆகஸ்ட் 11, 2026 | பொகோட்டா, கொலம்பியா

கொலம்பியாவின் மேற்கு பகுதியில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 111 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 87 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி சோகோ (Chocó) பிராந்தியத்தில் உள்ள San José del Palmar அருகே பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் கொலம்பியாவின் பல பகுதிகளிலும், அண்டை நாடுகளான ஈக்வடார், பனாமா மற்றும் வெனிசுலாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், 1,600-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 61 கட்டிடங்கள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக Cali, Pereira, Quibdó மற்றும் Manizales உள்ளிட்ட நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால், மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கொலம்பியா அரசு அவசரநிலையை அறிவித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், முழுமையான சேத விவரங்களை மதிப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் கொலம்பியாவில் பதிவான மிக வலுவான நிலநடுக்கமாக இந்தச் சம்பவம் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.















