விதிமுறைகளை மீறி கட்டப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு அங்கீகாரம் இல்லை – பிரதமர் அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்
புத்ராஜெயா | பிப். 9

நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் அல்லது பிறருக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் எந்தவொரு மத வழிபாட்டுத் தலங்களுக்கும் அரசாங்கம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அனைத்து மதங்களுக்கும் அரசாங்கம் சம உரிமை வழங்கினாலும், சட்டத்தின் வரம்புக்குள் செயல்படுவது கட்டாயம் என அவர் வலியுறுத்தினார். சட்டத்தை மதித்து நடக்கும் போது மட்டுமே வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“சட்டத்தை மதித்தால் அனைத்தும் சாத்தியமாகும். ஆனால், பிறருக்குச் சொந்தமான நிலங்களை அனுமதியின்றி ஆக்கிரமித்து, அங்கு இறைவழிபாடு செய்வது எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்? இது முற்றிலும் முரணான செயலாகும்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அனுமதியின்றி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களைப் பின்னர் சட்டப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று அரசாங்கத்தை யாரும் வற்புறுத்த முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
“எங்களின் நிலைப்பாடு தெளிவானது. சட்டவிரோதமாக கட்டப்பட்ட அத்தகைய வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படி செல்லாதவையே,” என்று அவர் கூறினார்.
தேசிய ஒற்றுமை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், அவற்றை அகற்றவும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மத விவகாரங்கள் மிகவும் நுணுக்கமானவை என்பதால், அவற்றை பொறுப்புடனும் சட்டபூர்வமாகவும் கையாள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டி குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, இனம், மதம் மற்றும் அரச நிறுவனம் தொடர்பான (3R) உணர்ச்சிகரமான விவகாரங்களில் சட்டத்தை மீறும் எவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.
நாட்டில் இன மற்றும் மத ஒற்றுமையைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.















