பினாங்கில் கவனத்தை ஈர்த்த தங்க–வெள்ளி ரத ஊர்வலங்கள்
பினாங்கு | ஜனவரி 31

பினாங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழாவின் முக்கிய அம்சமாக தங்க மற்றும் வெள்ளி ரத ஊர்வலங்கள் இவ்வாண்டும் கோலாகலமாக நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு–வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பங்கேற்புடன் இந்த ஊர்வலங்கள் பினாங்கு தீவையே பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்தன.
அழகன் முருகன் வீற்றிருக்கும் தங்க ரத ஊர்வலம் இன்று காலை 6 மணியளவில் லெபு குவின் சாலையிலிருந்து புறப்பட்டு, ஜாலான் கெபுன் புங்காவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு பாலதண்டாயுதபாணி (தண்ணீர்மலையான்) ஆலயத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. தங்க ரதத்தில் வீற்றிருந்த முருகப்பெருமானின் கம்பீரத் தோற்றம் பக்தர்களின் கண்களை கொள்ளை கொண்டது.
2017 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தங்க ரத ஊர்வலம், கடந்த ஆண்டுகளாக பினாங்கின் தைப்பூச விழாவிற்கு தனித்துவமான சிறப்பை சேர்த்து வருகிறது. ரத பவனியின் முழு நீளத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து நடந்து சென்று தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணிநேர இடைவெளிக்குப் பிறகு, 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி ரத ஊர்வலம் பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இந்த வெள்ளி ரதம், லெபு பினாங்கில் உள்ள நகரத்தார் கோயில் வீட்டிலிருந்து புறப்பட்டு, ஜாலான் அயர் தெர்ஜுன் பகுதியில் அமைந்துள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தை நோக்கி பயணித்தது.
வெள்ளி மற்றும் தங்க ரத ஊர்வலங்கள் நடைபெற்ற ஜாலான் மெகசின் மற்றும் ஜாலான் டாத்தோ கெரமட் பகுதிகளில் லட்சக்கணக்கான தேங்காய்கள் குவிக்கப்பட்டிருந்தன. இந்துக்கள் மட்டுமின்றி பிற இனத்தவர்களும் பக்தியுடன் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியது அங்கு வந்திருந்த பலரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், பினாங்கிற்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், பல மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்து ரத ஊர்வலங்களை கண்டு ரசித்தனர். தைப்பூச விழாவின் ஆன்மீகமும் பண்பாட்டுச் சிறப்பும் பினாங்கை உலகளவில் மேலும் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விழா அமைதியாகவும் ஒழுங்காகவும் நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.















