புதுடெல்லி, செப். 12–

மலேசியா–இந்தியா இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இரு நாடுகளின் வர்த்தகச் சமூகங்களை நேரடியாக இணைக்கும் புதிய கூட்டாண்மைத் தளத்தை ஒருங்கிணைக்கும் முக்கியப் பொறுப்பு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கான முடிவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மேற்கொண்டுள்ளனர்.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு இடையே இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உயர்மட்ட இருதரப்பு சந்திப்பின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியத் தூதுக்குழுவில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனியும், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனும் பங்கேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வலையமைப்புகளை விரிவுபடுத்துவதுடன், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவதே இந்தக் கூட்டாண்மையின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தை முன்னெடுத்து செயல்படுத்தும் பொறுப்பு அமைச்சர் ரமணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டாண்மை வெறும் ஏட்டளவிலான முயற்சியாக இல்லாமல், மலேசிய மக்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை உருவாக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
இப்பொறுப்பு குறித்து அமைச்சர் ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார ராஜதந்திரத்தின் உண்மையான வெற்றி என்பது முதலீட்டு எண்ணிக்கைகளில் மட்டுமல்ல; நாட்டிற்குள் தரமான வேலைவாய்ப்புகளையும் உயர்ந்த வருமானத்தையும் உருவாக்குவதில்தான் உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டாண்மை மூலம் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் ஒவ்வொரு முதலீடும் உள்ளூர் தொழிலாளர்களின் திறன் மேம்பாட்டுக்கும், உயர்மதிப்புமிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகுப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், குறைக்கடத்தி (Semiconductor), தொழில்முறை சேவைகள் மற்றும் நவீன உற்பத்தித் துறை உள்ளிட்ட உயர்மதிப்புமிக்க துறைகளில் இந்தியா கொண்டுள்ள உலகத்தரம் வாய்ந்த ஆற்றலைப் பயன்படுத்தி, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புச் சந்தைக்கும் புதிய வாய்ப்புகளைத் திறக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியப் பொருளாதார வளர்ச்சியை மலேசியர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நேரடி வாய்ப்புகளாக மாற்றுவதே மனிதவள அமைச்சின் முக்கிய இலக்கு என்றும் அமைச்சர் ரமணன் வலியுறுத்தினார்.















