கன்னம்மா – தி லவ்: அன்பின் ஆழமான செய்தியை நடனத்தின் மூலம் வெளிப்படுத்திய பிரமாண்ட நிகழ்வு

 

25 ஆகஸ்ட் 2026, கோலாலம்பூர்:

‘KANNAMMA – The LOVE’ எனும் சிறப்பு நடன நிகழ்ச்சியை இரண்டாவது முறையாகக் கண்டு ரசித்ததாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி. குணராஜ் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே தேவியைத் தாம் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இன்று அதே சிறுமி நம்பிக்கையுடனும் நேர்த்தியுடனும் திறமையான கலைஞராக மேடையில் திகழ்வதைப் பார்ப்பது தனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தார்.

சிறுமியாகத் தாம் அறிந்த தேவியின் கலைப் பயணம், இன்று தன்னம்பிக்கை மிக்க கலைஞராக உயர்ந்திருப்பது மிகவும் அழகான வளர்ச்சிப் பாதையாக அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.

2020ஆம் ஆண்டு ‘KANNAMMA – The Embodiment of Six Rites’ என்ற படைப்பின் மூலம் தொடங்கிய இந்தக் கலைப் பயணம், தற்போது ‘KANNAMMA – The LOVE’ என்ற புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது.

இது ஒரு தனிப்பட்ட கலைஞரின் பயணமாக மட்டும் இல்லாமல், நம்பிக்கை, வளர்ச்சி, மனத்தெளிவு, குணமடைதல் மற்றும் அன்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அனைவருக்குமான ஒரு பொதுவான பயணமாக உருவெடுத்துள்ளதாக குணராஜ் குறிப்பிட்டார்.

நடனம், இசை மற்றும் உணர்வுபூர்வமான கலை ஒத்துழைப்பின் மூலம் இந்தக் கருத்துகள் மேடையில் அழகாக வெளிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

‘KANNAMMA – The LOVE’ வெறும் நடன நிகழ்ச்சியாக இல்லாமல், வாழ்க்கைக்கு அர்த்தத்தை வழங்குவதிலும், மக்களை ஒன்றிணைப்பதிலும், மனிதர்களை மேலும் சிறப்பாக வளரத் தூண்டுவதிலும் அன்பு வகிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் ஆழமான செய்தியைத் தாங்கியிருந்ததாக அவர் பாராட்டினார்.

நாட்டியக் கலையின் அழகையும் அதன் ஆழமான உணர்வுகளையும் ஒருங்கிணைத்து, பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை உருவாக்கிய முழுக் குழுவினருக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்த அழகான கலைப் பயணத்தை உருவாக்கிய தேவியை லட்சுமணனுக்கு தனது பெருமையையும் வாழ்த்துகளையும் தெரிவித்த குணராஜ், அவருடைய அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கலை மீதான ஈடுபாடு தொடர்ந்து பலருக்கும் ஊக்கமளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

“அன்பு இருக்கும் இடத்தில்தான் வாழ்க்கை தொடங்குகிறது” என்ற ஆழமான கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘KANNAMMA – The LOVE’, கலை என்பது பொழுதுபோக்கைத் தாண்டி மனிதர்களின் மனதைத் தொடவும், வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளை எடுத்துரைக்கவும் முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *