31 ஜூலை 2026 ஷா ஆலம்:

மாணவர்களிடையே நாளிதழ் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து, தாய்மொழி மீதான பற்றையும் பொது அறிவையும் வளர்க்கும் நோக்கில், ஷா ஆலம் ஐக்கோம் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் (SJKT HICOM) “நாளிதழை வாசிப்போம் வாரீர்” என்ற வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பள்ளி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
“மக்கள் ஓசை” நாளிதழின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு 50 பிரதிகள் மக்கள் ஓசை நாளிதழ் இலவசமாக வழங்கப்பட்டன. மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஆழமாக விதைத்து, செய்திகளை ஆராய்ந்து படிக்கும் திறனை வளர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஏற்பாட்டாளர் கலைச்செல்வி பெருமாள், இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை மீண்டும் உருவாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது என்றார். நாளிதழ் வாசிப்பு மூலம் மொழித்திறன், சிந்தனைத் திறன், பொது அறிவு மற்றும் சமூக விழிப்புணர்வு ஆகியவை மேம்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், “தாய்மொழியின் அவசியத்தை உணர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் மாண்பைக் காப்போம்” என்ற உயரிய நோக்கத்துடன் தொடர்ந்து பல்வேறு கல்வி மற்றும் வாசிப்பு சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிபிபி கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சுரேந்திரன் முனியாண்டி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் நந்தா விஜயன், தலைமையாசிரியர் திருமதி வைஜெயந்திமா வேலாயுதம், துணைத் தலைமையாசிரியர்கள் திருமதி கலா கருப்பு மற்றும் திரு. அன்பரசன், ஆசிரியர்கள், பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், மாணவர்கள் நாளிதழ்களை ஆர்வமுடன் வாசித்து, கல்வி அறிவுடன் சமூகப் பொறுப்புணர்வும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இத்தகைய முயற்சிகள் மாணவர்களிடையே வாசிப்பு கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அறிவார்ந்த மற்றும் தொலைநோக்கு பார்வையுடைய தலைமுறையை உருவாக்கும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
“வாசிப்போம்… சிந்திப்போம்… சாதிப்போம்…” என்ற முழக்கத்துடன் நிறைவடைந்த இந்த நிகழ்ச்சி, மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை மேலும் வலுப்படுத்திய அர்த்தமுள்ள கல்வி முயற்சியாக அமைந்தது.















