30 ஜூலை 2026

கோலாலம்பூர், 30 ஜூலை – மேபேங்கின் (Maybank) புதிய தலைமையகத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய சக்திகளில் நிதி நிறுவனங்கள் ஒன்றாக திகழ்கின்றன என்று வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் அல்லது நிறுவனங்களின் இலாப எண்ணிக்கைகளால் மட்டும் அளவிடப்பட முடியாது என்றார். மாறாக, அந்த வளர்ச்சியின் பலன்கள் பொதுமக்களின் வாழ்க்கையில் எந்தளவிற்கு சென்றடைகின்றன என்பதே உண்மையான முன்னேற்றத்தின் அளவுகோல் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு மக்களும் தரமான மற்றும் நம்பகமான நிதிச் சேவைகளை எளிதில் பெறும் வகையில் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தங்களது சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிலும் நிதி உட்சேர்க்கை (Financial Inclusion) வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.
ஒரு நிதி நிறுவனத்தின் உண்மையான வலிமை அதன் சொத்து மதிப்போ அல்லது வர்த்தக வெற்றியோ அல்ல; மாறாக நேர்மை, சிறந்த நிர்வாகம் (Good Governance), வெளிப்படைத்தன்மை மற்றும் உயர்ந்த ஒழுக்கநெறிகளைப் பின்பற்றும் தொழில்முறை பணியாளர்களே அதன் அடித்தளம் என்று பிரதமர் கூறினார். இம்மதிப்புகள் இல்லையெனில், உலகத் தரத்தில் விளங்கும் பெரிய நிறுவனங்கள்கூட வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்தார்.
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI), குவாண்டம் கணினி தொழில்நுட்பம் (Quantum Computing) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு பின்தள்ளப்படக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தொழில்நுட்ப முன்னேற்றம் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எந்த ஒரு சமூகமும் பின்தங்கிவிடக் கூடாது,” என்று பிரதமர் தனது உரையில் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் வங்கி மற்றும் நிதித் துறை உலகளாவிய போட்டித் திறனை மேலும் வலுப்படுத்துவதோடு, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டு சூழலை மேம்படுத்துவதற்கும், மக்களின் நலனை முன்னிறுத்தும் சேவைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேபேங்கின் புதிய தலைமையகம், டிஜிட்டல் மாற்றம், புதுமை மற்றும் நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மலேசியாவின் நிதித்துறையின் எதிர்கால வளர்ச்சியை பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.















