ஜூன் 23, 2026 | ஜோகூர் பாரு

ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பிரதமரும் பக்காத்தான் ஹரப்பான் (PH) தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாநிலம் முழுவதும் போட்டியிடவுள்ள 56 வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த வேட்பாளர்கள் பல்வேறு இன, மத மற்றும் சமூகப் பின்னணிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், ஒவ்வொரு தொகுதியின் மக்களுடன் நெருக்கமாக தொடர்புடைய உள்ளூர் பிரச்சினைகளை முன்வைத்து சேவை செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வில் உரையாற்றிய அன்வார் இப்ராஹிம், மத்திய அரசின் நிர்வாக சாதனைகள் பக்காத்தான் ஹரப்பானுக்கு மக்களிடையே வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அதனால், ஜோகூரில் மாற்றத்திற்கான தெளிவான நோக்கத்துடனும் உறுதியான திட்டங்களுடனும் தேர்தலை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
“மடானி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஜோகூர் மாநிலத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜோகூர் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை,” என்று அவர் வலியுறுத்தினார்.
அவரது விளக்கத்தின்படி, ஜோகூர் மாநிலம் கூட்டாட்சி அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் RM14 பில்லியன் வருவாய் வழங்கினாலும், அதற்கு மேலாக RM16 பில்லியனுக்கும் அதிகமான தொகை மாநிலத்தின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் மக்களின் நலனுக்காக மீண்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்டாட்சி ஒதுக்கீடுகளை அதிகமாகப் பெறும் மாநிலங்களில் ஜோகூர் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனநாயகத்தின் மாண்பை பாதுகாப்பதன் அவசியத்தையும் அன்வார் வலியுறுத்தினார். அரசியல் போட்டி என்பது அரசியல் கட்சிகளுக்கிடையேயானதாக இருக்க வேண்டும்; எந்தவொரு தேசிய அல்லது அரசமைப்புச் நிறுவனங்களையும், குறிப்பாக அரச குடும்ப நிறுவனத்தையும் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்துவரக் கூடாது என்றார்.
“போட்டியிட விரும்பினால் களத்தில் இறங்கி மரியாதையுடன் போட்டியிட வேண்டும். உண்மைகள், கொள்கைகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும். அரச குடும்பத்தை அல்லது இன, மத உணர்வுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் தெரிவித்தார்.
ஜோகூர் மக்களுக்கு எதிர்காலத்திற்கான சிறந்த திட்டங்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை முன்வைப்பதே அரசியல் கட்சிகளின் கடமையாகும் என்றும், வெறுப்பு மற்றும் பிளவை விதைக்கும் அரசியல் நடைமுறைகளை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர்களுக்கு அவர் விடுத்த செய்தியில், இந்தத் தேர்தல் அதிகாரம் அல்லது பதவிக்கான போட்டி அல்ல என்றும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஒரு பெரிய பொறுப்பு என்றும் நினைவூட்டினார்.
“ஜோகூரை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மக்களின் நம்பிக்கையை நீங்கள் சுமக்கிறீர்கள். நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
வரவிருக்கும் மாநிலத் தேர்தல் ஜோகூரின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்படுவதால், பக்காத்தான் ஹரப்பான் தனது வளர்ச்சி சாதனைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து வாக்காளர்களின் ஆதரவை நாடவுள்ளது.
“Johor Ke Depan, Undi Harapan” என்ற முழக்கத்துடன் பக்காத்தான் ஹரப்பான் தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.















