சிரம்பான், ஜூன் 5, 2026

இதுகுறித்த அறிவிப்பை மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
கடந்த சில வாரங்களாக மாநில சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு அதற்கான அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ ஸ்ரீ அமினுடின், மாநிலத்தின் மாட்சிமை தங்கிய யாங் டி-பெர்துவான் பெசாரை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னர் மாநில சட்டமன்றத்தை ஜூன் 5 முதல் கலைப்பதற்கு அரசர் தனது ஒப்புதலை வழங்கியதாகவும் தெரிவித்தார்.
“மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான அரச ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால், இன்று முதல் சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
சட்டமன்றக் கலைப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை விரைவில் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் வேட்புமனுத் தாக்கல் நாள், முன்கூட்டிய வாக்களிப்பு நாள், பிரச்சார காலம் மற்றும் வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட முக்கிய தேர்தல் அட்டவணைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாநிலத்தில் ஆளும் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும் டத்தோ ஸ்ரீ அமினுடின் தெரிவித்தார்.
“நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் தயாரிப்புகள் நிறைவடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடத் தயாராக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
அதேவேளையில், மாநிலத்தில் உருவாகியிருந்த அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்தக் கலைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2028 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடியதாக இருந்தபோதிலும், அரசியல் சூழ்நிலை மற்றும் மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், மாநிலத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகளை அறிவிக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்புடன் மாநில அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றும், ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.















