கோலாலம்பூர், ஜூன் 5

16-வது ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, நம்பிக்கைக் கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) மாநிலத் தேர்தல் கேந்திரம் நாளை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
அக்கேந்திரத்தை பிரதமரும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை இரவு தொடக்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நாளை இரவு 8 மணிக்கு பத்து பஹாட் சீன உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் ஜிம்மி புவா வீ செ இன்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் இயந்திரத்தை முழுமையாக இயக்கும் நோக்கில் இக்கேந்திரம் அமைக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள், தன்னார்வலர் ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் அணுகுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான மையமாக இக்கேந்திரம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடக்க விழாவில் நம்பிக்கைக் கூட்டணியின் துணைத் தலைவரும் ஜனநாயக செயல் கட்சியின் (DAP) பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் மற்றும் அமானா கட்சியின் தலைவரான டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் மாநில சட்டமன்றத்தின் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடும் இலக்கை நம்பிக்கைக் கூட்டணி ஏற்கனவே அறிவித்துள்ளது. மாநில ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் கூட்டணிக் கட்சிகள் தீவிரமான தேர்தல் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஜோகூர் மாநிலத் தேர்தல் மலேசிய அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் தங்களது தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் கேந்திரத்தின் தொடக்க நிகழ்வு, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதிகாரப்பூர்வ தொடக்கமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.















