கோலாலம்பூர், ஜூன் 2

சமூக ஊடகங்களின் தாக்கம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வாழ்க்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது வெறும் தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல; மாறாக, அவர்களின் உணர்ச்சி, சமூக மற்றும் உளவியல் வளர்ச்சியையும் தீவிரமாக பாதிக்கும் ஒரு தேசியக் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது என்று கல்வி மற்றும் உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (UPSI) கல்வி உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் சதீஷ் ராவ் அப்பளநாயுடு கூறுகையில், 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இன்னும் முக்கியமான மூளை மற்றும் உணர்ச்சி வளர்ச்சி நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்தார்.
அவர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன், சரியான முடிவுகளை எடுக்கும் ஆற்றல் மற்றும் ஆபத்துகளை மதிப்பிடும் திறன் ஆகியவை இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாத காரணத்தால், சமூக ஊடகங்களில் ஏற்படும் அழுத்தங்களுக்கு அவர்கள் எளிதில் ஆளாகின்றனர் என்றார்.
“சமூக அங்கீகாரத்தைப் பெறும் நோக்கில் ‘லைக்’, ‘பின்தொடர்பவர்கள்’ (followers) மற்றும் இணையப் புகழை நாடும் மனப்போக்கு அதிகரித்து வருகிறது. மேலும், பயனர்களை நீண்ட நேரம் ஈர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சமூக ஊடக அல்காரிதங்கள் இளம் தலைமுறையை அதிக நேரம் திரையில் செலவிடத் தூண்டுகின்றன,” என்று அவர் கூறினார்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படாவிட்டால், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் டிஜிட்டல் அறிவாற்றல் கொண்டிருந்தாலும், உணர்ச்சி மற்றும் சமூகத் தாங்கும் திறன் குறைந்த ஒரு தலைமுறையை நாடு எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலை தொடர்ந்தால், டிஜிட்டல் அடிமைத்தனம், மனஅழுத்தம், பதட்டம், கோபக் கட்டுப்பாட்டின்மை மற்றும் சமூக ஊடகங்களில் ஏற்படும் விமர்சனங்களையோ நிராகரிப்புகளையோ ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (USM) கல்வியியல் ஆய்வுமையத்தின் விரிவுரையாளரும் ‘ஹாத்தி படி’ (Hati Buddy) திட்டத்தின் நிறுவனருமான பேராசிரியர் டாக்டர் ஜமால்சஃப்ரி சைபோன், சமூக ஊடகங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் தற்போது மிகவும் கவலைக்குரிய அளவை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, இணைய வழி கொடுமைப்படுத்தல் (Cyberbullying), இணைய மோசடி போன்றவற்றுடன், பாலியல் சுரண்டல், வயதுக்குப் பொருந்தாத உள்ளடக்கங்களின் தாக்கம் மற்றும் மனநலப் பாதிப்புகள் போன்ற ஆபத்துகளும் குழந்தைகளை அச்சுறுத்துகின்றன.
“சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதற்கான வயது வரம்பை நிர்ணயிப்பது ஒரு நல்ல ஆரம்ப பாதுகாப்பு நடவடிக்கை. ஆனால், ஒரே ஒரு சட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க முடியாது,” என்று அவர் வலியுறுத்தினார்.
“தொழில்நுட்பம் நமது எதிரி அல்ல. குழந்தைகள் டிஜிட்டல் உலகில் நுழைவதற்கு முன்பு போதுமான மனப்பக்குவத்தையும் பொறுப்புணர்வையும் பெற்றிருக்கிறார்களா என்பதே உண்மையான சவாலாகும்,” என்றார்.
மேலும், டிஜிட்டல் கல்வியறிவு, பெற்றோரின் கண்காணிப்பு, பள்ளிகளின் விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களின் பொறுப்புணர்வு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, அரசாங்கம் சமீபத்தில் அமல்படுத்தியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்புச் சட்டம் (Online Safety Act 2025 – ONSA) மூலம், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, டிஜிட்டல் சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கியமான கொள்கை முயற்சியாகக் கருதப்படுவதோடு, எதிர்கால தலைமுறையின் மனநலம் மற்றும் சமூக நலனைக் காக்கும் நீண்டகால முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.















