இன்று உலக வர்த்தக மையம் கோலாலம்பூரில் (WTCKL) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.

 

கோலாலம்பூர், மே 29, 2026

மலேசியாவின் முக்கியமான சர்வதேச புத்தக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 2026ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (KLIBF 2026) இன்று உலக வர்த்தக மையம் கோலாலம்பூரில் (WTCKL) பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் நிகழ்விடம் வந்த பிரதமருக்கு, அதிகாலை முதலே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் மற்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, பிரபல அரசியல் கேலிச்சித்திரக் கலைஞர் சூல்கிப்ளீ எஸ்.எம். அன்வார் உல்ஹாக் (சூனர்) எழுதிய “மெம்பாங்குன் மஸ்யாரகாட் MADANI – வெர்சி கார்ட்டூன்” எனும் நூலை பிரதமர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்நூல், மதானி அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்த முயற்சிகள், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் திட்டங்களை பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கார்ட்டூன் வடிவில் எடுத்துரைக்கிறது.

புத்தக வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் KLIBF முக்கிய பங்காற்றி வருவதாக பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இளைஞர்கள் அதிகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு நடைபெறும் KLIBF 2026 கண்காட்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச பதிப்பகங்கள், கல்வி நிறுவனங்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள் பங்கேற்று பல்வேறு நூல்கள் மற்றும் அறிவியல் வெளியீடுகளை அறிமுகப்படுத்துகின்றன.

புத்தக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பங்களின் பெரும் வருகையால் WTCKL வளாகம் இன்று முழுவதும் விழாக்கோலமாகக் காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *