தேதி: 15 மே 2026 கோலாலம்பூர்

ஜூலை 1 முதல் ஆஸ்ட்ரோவில் RTM ஒளிபரப்பு நிறுத்தம்
சுமார் 30 ஆண்டுகால ஒத்துழைப்புக்கு முற்றுப்புள்ளி

Radio Televisyen Malaysia மற்றும் Astro Malaysia Holdings Berhad இடையிலான சுமார் 30 ஆண்டுகால ஒளிபரப்பு ஒத்துழைப்பு, வரும் ஜூலை 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வருகிறது.
RTM வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பின்படி, TV1-HD, TV2-HD மற்றும் Okey ஆகிய அதன் தொலைக்காட்சி சேனல்கள், ஆஸ்ட்ரோ செயற்கைக்கோள் தளத்திலும் அதன் OTT (Over-The-Top) சேவையிலும் இனி ஒளிபரப்பப்படமாட்டாது.
கட்டண உயர்வு, சேனல் வாடகை செலவுகள் மற்றும் புதிய ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பான நீண்டகால பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்ட முடியாததே இந்த முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
RTM தனது அறிக்கையில், “பல ஆண்டுகளாக செலவுகள் மற்றும் சேவை கட்டணங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இரு தரப்பினரின் தேவைகளையும் நிதித் திறனையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவது கடினமாகியுள்ளது,” என தெரிவித்துள்ளது.
1996ஆம் ஆண்டு முதல் TV1 மற்றும் TV2 சேனல்கள் ஆஸ்ட்ரோவில் ஒளிபரப்பாகி வந்தன. பின்னர் 2009ஆம் ஆண்டு Okey சேனலும் இணைக்கப்பட்டது. இதன் மூலம் இரு நிறுவனங்களும் பல கூட்டு தயாரிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இணைந்து செயல்பட்டதாக RTM குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, சேனல் ஒளிபரப்பு வாடகைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், RTM மீது ஏற்படும் நிதிச் சுமை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சேவையை நிறுத்துவது அவசியமான முடிவாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, நீண்டகாலமாக ஆஸ்ட்ரோ தளத்தின் மூலம் RTM சேனல்களைப் பார்வையிட்டு வந்த மலேசிய பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கிராமப்புற மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி பயனாளர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஊடக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், RTM சேனல்களை மக்கள் இனி MyFreeview மற்றும் RTM Klik போன்ற மாற்று தளங்கள் வழியாக தொடர்ந்து அணுக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.













