அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தல்
வாஷிங்டன், மார்ச் 3-

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அங்கிருக்கும் அமெரிக்கக் குடிமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சு அவசர அழைப்பு விடுத்துள்ளது.
சிஎன்என் (CNN) ஊடகத்தின் செய்தியை மேற்கோள் காட்டி எக்ஸ் (X) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவலின்படி, தற்போதும் செயல்பாட்டில் இருக்கும் வணிக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி குடிமக்கள் வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், குவைத், லெபனான், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தூதரக விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மோரா நம்தார், நாடு திரும்ப உதவி தேவைப்படும் அமெரிக்கக் குடிமக்கள் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது தூதரக அலுவலகங்கள் வாயிலாகப் பாதுகாப்பு தொடர்பான உடனுக்குடன் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஈரான் அந்தப் பிராந்தியத்தில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மேற்கொண்டு வரும் இந்தத் தாக்குதல்களில் சில அமெரிக்காவின் நலன்களை இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வருவதால், சில குறிப்பிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.














