அம்பாங், செப்டம்பர் 7:

அம்பாங் வட்டாரத்தில் முதல் முறையாக மாபெரும் தீபாவளி திருவிழா மற்றும் தீபாவளி சந்தை நடைபெறவுள்ளதாக அம்பாங் இந்திய சமூக நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் எம்.ஏ. ரவின் தெரிவித்தார்.

தீபாவளி பெருநாள் நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த பிரமாண்ட தீபாவளி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி, தீபாவளி முதல் நாள் இரவு வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அம்பாங் டேவான் டத்தோ அஹ்மத் ரசாலியில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் சுமார் 40 வணிகக் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், ஆடைகள், தீபாவளி அலங்காரப் பொருட்கள், உணவு மற்றும் பல்வேறு வணிகப் பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விற்பனைத் தளங்கள் இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக அம்பாங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் உள்ளூர் இந்திய வணிகர்களுக்கு தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தவும், தீபாவளி கால விற்பனையை அதிகரிக்கவும் வாய்ப்பு வழங்குவதாக ரவின் குறிப்பிட்டார்.

“தீபாவளி சந்தை என்றாலே வெளிநாட்டு வணிகர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. ஆனால், அம்பாங் தீபாவளி சந்தையைப் பொறுத்தவரை உள்ளூர் வணிகர்களுக்கே முதன்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளை, உள்ளூர் வணிகர்கள் போதிய அளவில் பங்கேற்காத பட்சத்தில், சந்தையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வெளிநாட்டு வணிகர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.

எனவே, அம்பாங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வணிகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, தீபாவளி சந்தையில் தங்களது வணிகத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வர வேண்டும் என ரவின் கேட்டுக் கொண்டார்.

மேலும், அம்பாங் வட்டார பொதுமக்கள் அனைவரும் இந்த முதல் மாபெரும் தீபாவளி திருவிழாவிற்கு முழுமையான ஆதரவை வழங்கி, உள்ளூர் வணிகர்களின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தீபாவளியை முன்னிட்டு குடும்பத்துடன் வந்து பொருட்களை வாங்கவும், உணவு வகைகளைச் சுவைக்கவும், வணிகர்களுக்கு ஆதரவு வழங்கவும் பொதுமக்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகக் கூடாரம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு: எம்.ஏ. ரவின் தொலைபேசி: 016-396 2166.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *