திறந்த மனப்பான்மையும் உள்ளூர் பண்பாடும் இணைந்த கலைத்துறை அவசியம் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், 24 ஆகஸ்ட் 2026:


மலேசியாவின் கலை மற்றும் திரைப்படத் துறையில் திறந்த மனப்பான்மைக்கு இடமளிக்க வேண்டும் என்றாலும், அது நாட்டின் தனித்துவமான பண்பாடு, விழுமியங்கள் மற்றும் சமூக அடையாளத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் மலேசியாவின் கலைத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைய வேண்டுமெனில், இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்புகளையும் சமூகத்தின் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

“நான் என்னை தாராளவாதி என்று சித்தரிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில், இளைஞர்களும் பொதுமக்களும் அதிக சுதந்திரத்தையும் திறந்த அணுகுமுறையையும் விரும்புகின்றனர் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளை, திறந்த அணுகுமுறை என்பது மேற்கத்திய கலாசாரத்தை அப்படியே பின்பற்றுவதையோ அல்லது எந்தவொரு வெளிநாட்டு சிந்தனை முறையையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதையோ குறிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“மேற்கத்திய அணுகுமுறையை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல், கிழக்கத்திய அல்லது கடுமையான பழமைவாத அணுகுமுறையையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டியதில்லை. நமது சொந்த அடையாளத்திற்கேற்ற பாதையை உருவாக்க வேண்டும்,” என்றார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS-இன் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், மலேசிய திரைப்படத்துறை நாட்டின் பன்முகத்தன்மை, கலாசாரம் மற்றும் தனித்துவமான அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான தளமாக விளங்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், திரைப்படம் மட்டுமன்றி நாடகம், இலக்கியம் மற்றும் பல்வேறு கலைத்துறைகளுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இத்துறைகள் நாட்டின் தனித்துவமான கலை மற்றும் கலாசார அடையாளத்தை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார்.

ஒருகாலத்தில் மலேசிய திரைப்படங்கள் மற்றும் கலைப்படைப்புகளுக்கு இருந்த வரவேற்பு தற்போது அதே அளவில் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உள்ளூர் கலைத்துறையை மீண்டும் வலுப்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேவேளை, தொழில்துறையின் வளர்ச்சியை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், கலைஞர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் கலைத்துறையின் பின்னணியில் பணியாற்றும் அனைத்து தரப்பினரின் நலன்களும் கவனிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

“இந்தத் துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் முயற்சிகளே மலேசிய கலைத்துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுகின்றன,” என பிரதமர் கூறினார்.

ஒரு நாட்டின் கலைப்படைப்புகள் அதன் மக்களின் சிந்தனை, வாழ்க்கை முறை, விழுமியங்கள் மற்றும் பண்பாட்டை பிரதிபலிப்பவை என்பதால், மலேசிய கலைத்துறை வளர்ச்சியடைவது நாட்டின் அடையாளத்தை உலகளவில் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *