ஆகஸ்ட் 4 2026

மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) சிலாங்கூர் மாநில தொடர்புக் குழுவின் செயலாளர் சசிதரன் மறைகணசம்பந்தன், இன்று முன்னாள் மஇகா பிரிவு தலைவர் திரு. சண்முகம் தலைமையிலான கிளையின் உறுப்பினரான திரு. மணியம் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தற்போது முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் திரு. மணியம், உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு பெற்று வருகிறார். அவரின் தற்போதைய உடல்நிலை, வாழ்வாதார சூழல் மற்றும் தேவைகள் குறித்து சசிதரன் மறைகணசம்பந்தன் விரிவாக அறிந்து கொண்டதுடன், அவருக்குத் தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை விரைவாகப் பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பின் போது, திரு. மணியத்திற்கு சமூக நலத்துறை (Jabatan Kebajikan Masyarakat) மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு (SOCSO) மூலம் கிடைக்கக்கூடிய உதவிகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், கிள்ளான் சமூக நலத்துறை அலுவலகத்தின் வாயிலாக இந்த விவகாரத்தை திரு. எதிராஜ் நேரடியாக ஒருங்கிணைத்து, தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக கிடைப்பதை உறுதி செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து சசிதரன் மறைகணசம்பந்தன் கூறுகையில், “மஇகா உறுப்பினர்கள் எந்தச் சூழ்நிலையிலும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். உதவி தேவைப்படும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தேவையான ஆதரவை வழங்குவது எங்களின் சமூகப் பொறுப்பாகும். திரு. மணியம் விரைவில் உடல்நலம் பெற்று நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.
மஇகா சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு, சமூக நலன் மற்றும் உறுப்பினர்களின் நலவாழ்வை முன்னுரிமையாகக் கொண்டு தொடர்ந்து சேவையாற்றி வருவதாகவும், உதவி தேவைப்படும் உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்கும் பணிகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.















